ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு எதிர்ப்பு

ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு தீபா எதிர்ப்பு

Aug 25, 2018, 15:55 PM IST

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக எடுப்பதற்கு அவரது குடும்ப உறவினர்களான அண்ணன் மகன் தீபக்கும் அண்ணன் மகள் தீபாவும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Jayalalithaa

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கப்போவதாக இயக்குனர் விஜய் தரப்பினர் அறிவிப்பு வெளியிட்டனர். இதனையடுத்து, தானும் ஜெயலலிதாவின் வாழ்க்கை பற்றிய படத்தை எடுக்கப் போவதாக இயக்குனர் மிஷ்கினின் உதவியாளர் பிரியதர்ஷினி அறிவித்தார். இதேபோல, இயக்குனர் பாரதிராஜாவும் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்கப் போவதாக தெரிவித்தார்.

இந்நிலையில், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், “ஜெயலலிதா அத்தையின் வாழ்க்கையை படமாக எடுப்பது குறித்து என்னிடமும் என் சகோதரி தீபாவிடமும் அனுமதி பெற வேண்டும். சசிகலாவிடமும் அனுமதி பெற வேண்டும். இதுவரை யாரும் எங்களிடம் அனுமதி பெறவில்லை. அத்தையின் வாழ்க்கையை படமாக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். மீறி படம் எடுத்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.” என்று தெரிவித்துள்ளார்.

இதேபோல, ஜெயலலிதாவின் அண்ணன் மகளும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை நிறுவனருமான ஜெ.தீபா, “ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்கப் போவதாகக் கேள்விப்பட்டேன். இதுவரை எந்த இயக்குனரும் என்னிடம் அனுமதி வாங்கவில்லை. ஒருவரின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுக்க வேண்டுமானால் அவரின் வாரிசுகளிடம் அனுமதி வாங்க வேண்டும்.

Deepa

அதுபோல ஜெயலலிதாவின் வாரிசுகளான என்னிடம் அல்லது என் சகோதரன் தீபக்கிடம் அனுமதி வாங்க வேண்டும். ஜெயலலிதா பற்றி எங்களிடம் பேசவேண்டும். அப்போதுதான் ஜெயலலிதாவின் உண்மையான வாழ்க்கை வரலாறு கிடைக்கும். எங்களிடம் பேசினால் மட்டுமே அவர்களின் ஆரம்பகால வாழ்க்கையைப் பற்றித் தெரிந்துகொள்ள முடியும்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையைப் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரைப் பற்றிய வெளியில் தெரியாத தகவல்கள் வேண்டுமானால், குடும்ப உறுப்பினர்களிடம் பேசினால் மட்டுமே சாத்தியம். ஜெயலலிதாவின் வாழ்க்கையைத் திரைப்பட மாக எடுப்பதை ஒருபோதும் வரவேற்க மாட்டேன். ஏனென்றால், ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதைப் பற்றிய விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் எந்தவொரு முடிவும் தெரியவில்லை. ஜெயலலிதாவின் கடைசிக் காலத்தில் அவரைச் சுற்றி மிகப்பெரிய சூழ்ச்சியே நடந்திருக்கிறது.

இப்படி இருக்கும் நிலையில் ஜெயலலிதா பற்றிய வாழ்க்கை வரலாற்றை சினிமாவாக எடுத்தால் எந்த அளவுக்கு, அவரைப் பற்றிய உண்மைகள் வெளிவரும்? அதனால், இந்த நேரத்தில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு பற்றிய சினிமா எடுப்பதற்கு நான் அனுமதி தரமாட்டேன்” என்று கூறியுள்ளார். இதனால் ஜெயலலிதாவைப் பற்றி படம் எடுப்பதில் சிக்கல் ஏற்படும் என்று கூறப்படுகின்றது.

You'r reading ஜெயலலிதா வாழ்க்கை படத்துக்கு எதிர்ப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை