கோவை மாநகரில் மிக விரைவில் மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில், 60 சொகுசு பேருந்துகள் உள்பட 471 புதிய பேருந்துகள் சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் ஒவ்வொரு கோட்டத்திற்கும் பிரித்து வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கோவை கோட்டத்திற்கு, 43 பேருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளது.
அதில் கோவை மண்டலத்திற்கு 10 பேருந்துகளும், திருப்பூர் மண்டலத்திற்கு 28 பேருந்துகளும், ஈரோடு மண்டலத்திற்கு 5 பேருந்துகளும் ஒதுக்கப்பட்டு உள்ளது. கோவை கோட்டத்திற்கு உட்பட்ட புதிய பேருந்துகள் சேவையை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய அவர்,"கோவை மாநகரில் மேம்பாலம், சாலை மற்றும் விமான நிலைய விரிவாக்கம், நவீன கார் நிறுத்தம், மெட்ரோ ரெயில் போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.மக்களுக்கு தேவையான திட்டங்களை அறிந்து இந்த அரசு செயல்படுத்தி வருகிறது"
"சென்னையில் சுற்றுப்புற சூழல் பாதிக்காதவாறு இங்கிலாந்து டி 40 நிறுவனத்துடன் சேர்ந்து 80 மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. கோவையிலும் 20 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால் செலவுகள் குறையும்." என அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.