சத்தீஸ்கர்- வாஜ்பாயின் அண்ணன் மகளை களமிறக்குகிறது காங்கிரஸ்
சத்தீஸ்கர் மாநில முதல் அமைச்சர் ராமன் சிங்கிற்கு எதிராக வாஜ்பாயின் அண்ணன் சுதாவின் மகளும் முன்னாள் மக்களவை உறுப்பினருமான கருணா சுக்லாவை காங்கிரஸ் களமிறக்கியுள்ளது.
சத்தீஸ்கரில் நவம்பர் மாதம் 12ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதில் ராஜ்நண்ட்கன் தொகுதியில் முதல் அமைச்சர் ராமன் சிங் போட்டியிடுகிறார். நவம்பர் 12ம் தேதி தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பு மனு தாக்கல் செய்ய அக்டோபர் 23ம் தேதிதான் கடைசி நாள்.
முதற்கட்ட தேர்தல் 18 தொகுதிகளுக்கு நடைபெறும் நிலையில் ஏற்கனவே 12 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் அறிவித்திருந்தது. ராய்ப்பூரில் பேரணி ஒன்றில் உரையாற்றுவதற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வரவிருந்த நிலையில் கருணா சுக்லா, வேட்பாளராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
1993ம் ஆண்டு முதன்முறையாக பாரதீய ஜனதா கட்சி சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்ற கருணா சுக்லா, பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவராவார். அக்கட்சியின் தேசிய துணை தலைவர்களுள் ஒருவராகவும் மகளிர் அணியின் தேசிய தலைவராகவும் பதவி வகித்துள்ளார்.
2004ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஜாஞ்கிர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2009ம் ஆண்டு கோர்பா தொகுதியில் போட்டியிட்டு காங்கிரஸ் வேட்பாளரிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
வாஜ்பாய் தீவிர அரசியலில் இருந்து விலகிய பிறகு தாம் ஓரங்கட்டப்படுவதாக உணர்ந்த கருணா சுக்லா, 2013ம் ஆண்டு அக்டோபர் மாதம் பாரதீய ஜனதா கட்சியிலிருந்து விலகினார். 2014ம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2014ம் ஆண்டு பிலாஸ்பூர் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு பாரதீய ஜனதா வேட்பாளரிடம் தோல்வியை தழுவினார்.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயரை அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பாரதீய ஜனதா பயன்படுத்தி வருவதாக கருணா சுக்லா குற்றஞ்சாட்டுகிறார். "காங்கிரஸில் சேர்ந்த பிறகு கருணா சுக்லா, ராஜ்நண்ட்கன் தொகுதியில் தீரிவமாக இயங்கி வருகிறார்.
ராமன் சிங்கிற்கு வலுவான போட்டியாக விளங்குவதோடு, அவரை தோற்கடிக்கக்கூடிய செல்வாக்கும் கொண்டவர்" என்று காங்கிரஸின் செய்தி தொடர்பாளர் ஷைலேஷ் நிதின் திரிவேதி செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.