ஓமந்தூரார் சிறப்பு மருத்துவமனையில் இன்று விழிப்புணர்வு கூட்டம் அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்றது.
டெங்கு மற்றும் பன்றி காய்ச்சல் போன்ற நோய்கள் வராமல் தடுப்பதற்கான விழிப்புணர்வு கூட்டத்தில் பங்கேற்க கட்டுமான பணிகள் சங்கம், உணவகங்கள், திருமண மண்டப உரிமையாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள், வணிகர்கள், பள்ளி, கல்லூரி தாளாளர்கள் என பல தரப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
கூட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்தியில், அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்கு, மற்றும் பன்றி காய்ச்சல் வராமல் இருக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கமளித்தார்.
மேலும், சுகாதாரத்துறையை சேர்ந்த ஊழியர்கள் கொசுக்களை ஒழிக்க ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை முழுமையாக தரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர்: பப்பாளி இலை சாறு, நிலவேம்பு குடிநீர், மலை வேம்பு, போன்ற கஷாயங்கள், ஆரம்ப சுகாதார மருத்துவமனைகளில் வழங்கப்பட்டு வருகிறது.
டெங்கு காய்ச்சலை உருவாக்கும் கொசுக்களை அழிக்கவும், டெங்குவால் பாதிப்படைந்தவர்களுக்கு உதவி செய்யவும் 82 நடமாடும் மருத்துவ முகாம்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த குழுக்களில் உள்ளவர்கள் டெங்குவால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நோய் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுப்பார்கள். அதுமட்டுமின்றி எல்லா விதமான நோய்களுக்கும் மருந்துகள், ரத்த அணுக்கள், ரத்த கூறுகள், ரத்தம், பரிசோதனை கருவிகள் என அவசர உதவிக்கு தேவையான அனைத்தும் தயார் நிலையில் இருக்கிறது.
மேலும், டெங்கு காய்ச்சலை கண்டுபிடிக்கும் சோதனை மையம் 31ஆக இருந்து வந்தது. அது தற்போது 125 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. வியாழக்கிழமை தோறும் டெங்கு தடுப்பு நாளாக கடைபிடித்து மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள், பள்ளிகள், பொது மக்கள் அதிகம் இல்ல பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், உறுதிமொழி எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது மக்கள் எங்கு சென்று வந்தாலும், வீட்டிற்குள் செல்லும் முன்பு கை கால்களை கழுவி உள்ளே செல்ல அறிவுறுத்தி தனது பேச்சை முடித்தார் அமைச்சர் விஜயபாஸ்கர். கூட்டத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதா கிருஷ்ணன், மருத்துவமனை இயக்குனர் குழந்தை சாமி கலந்து கொண்டனர்.