மிளகு வயிற்றிலுள்ள வாயுவை வெளியேற்றுவதில் சிறந்தது. காரமும், மணமும் கொண்ட இந்த மிளகு செரிமானத்திற்கு துணைப்புரிகிறது.
“பத்து மிளகு கையிலிருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்” என்பது பழமொழி. இந்த பழமொழிக்கேற்ப பல்வேறு மருத்துவ குணங்கள் இம்மிளகில் அடங்கியுள்ளன. இதனை அரிசியுடன் சேர்த்து அடையாக செய்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி, புழுங்கலரிசி– 200 கிராம்
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
மிளகு – 2 தேக்கரண்டி (பொடித்து கொள்ளவும்)
தேங்காய் பெரிய துண்டுகள் – 2 (சிறிதாக நறுக்கிக்கொள்ளவும்)
உப்பு, நல்லெண்ணெய் – தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் பருப்பு மற்றும் அரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து நைசாக அரைத்துக் கொள்ளவும். இதனுடன் தேவையான அளவு உப்பு, நறுக்கி வைத்த தேங்காய் துண்டுகள் மற்றும் மிளகு தூள் சேர்த்து பிசையவும்.
பின்னர் தோசைக் கல்லை அடுப்பில் வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் ஊற்றி அடையாக செய்து சாப்பிடலாம்.
பயன்கள்
குழந்தைகளுக்கு நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.
தொண்டை மற்றும் வாயுத் தொல்லைக்கு சிறந்த உணவு.