நாளை ஞாயிற்றுக்கிழமை எத்தனையோ விதமான பிரியாணிகளை செய்திருப்பீர்கள். நாளை வித்தியாசமா கமகமக்கும் பஞ்சாபி பிரியாணியை செய்து சாப்பிட்டு சொல்லுங்க.
தேவையான பொருட்கள்:
இஞ்சி - 2 அங்குலம்
பூண்டு - 6 பல்
சின்ன வெங்காயம் - 125 கிராம்
தயிர் - 225 கிராம்
சீரகம் - 1 மேஜைக்கரண்டி
பிரியாணி இலை - சிறு துண்டு
முந்திரி பருப்பு - 15 கிராம்
பாதாம்பருப்பு - 15 கிராம்
சாரப் பருப்பு - 15 கிராம்
பிஸ்தா பருப்பு - 15 கிராம்
திராட்சை - 15 கிராம்
கோழித் துண்டுகள் - 125 கிராம்
உப்பு - தேவையான அளவு
சமையல் எண்ணெய் - தேவையான அளவு
பட்டை - சிறிது
ஏலக்காய் - சிறிது
கிராம்பு - சிறிது
பாசுமதி அரிசி - 2 கப்
செய்முறை:
2 அங்குலம் இஞ்சி, 6 பல் பூண்டு, 125 கிராம் சின்ன வெங்காயம் இவற்றை அரைத்துக் கொள்ளவும். 225 கிராம் தயிரை நன்கு கடைந்து கொள்ளவும். 1 மேஜைக்கரண்டி சீரகத்தை வறுத்து அரைத்துக் கொள்ளவும். பிரியாணி இலை ஒன்றைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரப் பருப்பு (சாரோலி), பிஸ்தா பருப்பு, திராட்சை ஆகியவற்றை ஒவ்வொன்றிலும் 15 கிராம் எடுத்து நெய்யில் வறுத்துக் கொள்ளவும்.
அரைத்த மசாலாவைத் தயிருடன் கலந்து, இதில் சுத்தம் செய்த கோழித் துண்டுகள் 125 கிராம், உப்புத்தூள் இவற்றையும் கலந்து 4 மணி நேரம் அப்படியே ஊற விடவும்.
அதன் பின் ஒரு கனமானப் பாத்திரத்தில் சமையல் எண்ணெய் 100 கிராம் ஊற்றி, காய்ந்ததும், 1/2 அங்குலம் பட்டை, பெரிய கறுப்பு ஏலக்காய் விதைகள் 1 மேஜைக்கரண்டி, 4 கிராம்பு, துண்டுகளாக்கிய பிரியாணி இலை, 2 தேக்கரண்டி மிளகாய்த்தூள் இவற்றைப் போட்டு வதங்கியதும், ஊற வைத்தக் கோழிக்கறி மசாலாவைச் சேர்த்து வாணலியை மூடி வைக்கவும்.
கறி வெந்து, மசாலா நன்கு வற்றி, எண்ணெய் பிரிந்ததும் இறக்கிக் கொள்ளவும். அடி கனமானப் பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும், 2 கப் பாஸ்மதி அரிசியைப் போட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து மிதமான தீயில் உதிர் உதிராக வேக வைத்து இறக்கவும் பின் இதனை 3 பாகங்களாகப் பிரித்துக் கொள்ளவும். ஒவ்வொரு பாகத்திலும் சிகப்பு, மஞ்சள், பச்சை கலர் கலந்து கொள்ளவும்.
அடி கனமானப் பாத்திரத்தில் 1 தேக்கரண்டி நெய் தடவி, ஒரு பாகம் சாதம், அதன் மீது கோழித்துண்டுகள், அதன் மீது மற்றொரு பாகம் சாதம், அதன் மீது கோழித்துண்டுகள் என மூன்று பாகமாக ஒன்றன் மீது ஒன்றாக வைத்து, மிதமான தீயில் 3 நிமிடங்கள் வைத்து இறக்கவும். மேல் பாகத்தில் பருப்பு வகைகளை தூவி, அதன் மீது வெள்ளி ஜரிகைத் தாள்களைப் போட்டு அலங்கரிக்கவும்.