ரசிகர்களே அதிக உற்சாகம் அடைய வேண்டாம், நாங்கள் தொழில் நேர்த்தியுடன் ஆடுகிறோம். உத்வேகம் விரைவில் எங்களை விட்டு சென்று விடவும் கூடும் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2021 தொடரின் 16-வது லீக் போட்டியில் ஆர்சிபி - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின். மும்பை வான்கடே மைதானத்தில் நடைறெ்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 178 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி களமிறங்கியது.
தொடக்க வீரர்கள் கேப்டன் விராட் கோலி மற்றும் படிக்கல் ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். இறுதியாக ஆர்சிபி அணி 16.3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. படிக்கல் 52 பந்துகளில் 101 ரன்கள் விளாசி ஐபிஎல் தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். ஆட்டத்திற்கு பிறகு பேசிய விராட் கோலி,``படிக்கல் இன்னிங்ஸ் ஒரு அபாரமான இன்னிங்ஸ், கடந்த ஐபிஎல் தொடரிலேயே படிக்கல் சிறப்பாக ஆடினார்.
40-5-க்குப் பிறகு அடித்து ஆட வேண்டும் என்று பேசினோம். படிக்கல் ஒரு மிகப்பெரிய திறமை, எதிர்காலத்துக்கான இந்திய வீரர். அவர் ஆட்டத்தை எதிர்முனையில் இருந்து ரசித்தேன். டி20 என்பதே கூட்டணி அமைத்து பேட்டிங் செய்வதே.
நான் எப்போதும் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பது முடியாத காரியம், எதிர்முனை வீரர் அடிக்கிறார் என்றால் நான் ஸ்ட்ரைக்கை ரொடேட் செய்வதுதான் சரி. இன்று என்னுடைய பேட்டிங் ரோல் மாறுபட்டது, கடைசியில் என் ஷாட்களுக்கான பந்துகளை தேர்வு செய்து அடித்தேன். பிட்ச் அருமையாக இருந்தது.
நானும் படிக்கல்லும் சதம் பற்றி பேசினோம். அவர் என்னை ஆட்டத்தை முடித்து விடுங்கள், என் சதம் இன்று மட்டுமல்ல இன்னும் நிறைய என்னிடமிருந்து வரும் என்றார், ஆனால் நான் முதலில் உன் முதல் சதத்தை எடுத்து விட்டு இதைச்சொல்லு என்றேன்.
இந்தச் சதத்துக்கு படிக்கல் தகுதியானவரே. தவறுகள் இல்லாத இன்னிங்ஸ், துல்லியமான இன்னிங்ஸ். எங்கள் அணியில் தனித்துவமான பவுலிங்குக்கான வீரர்கள் இல்லை, ஆனால் எங்கள் பந்து வீச்சு திறம்பட இருக்கிறது. டெத் ஓவர்களில் 4 போட்டிகளிலுமே சிறப்பாக திகழ்ந்தோம். ரசிகர்களே அதிக உற்சாகம் அடைய வேண்டாம், நாங்கள் தொழில் நேர்த்தியுடன் ஆடுகிறோம். உத்வேகம் விரைவில் எங்களை விட்டு சென்று விடவும் கூடும். அதீத உற்சாகம் தேவையில்லை என்று தெரிவித்துள்ளார்.