இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு கம்பெனிக்கு 2 சிஇஓ எதற்கு தேவை என்று கேட்கிறார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ். சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் 13வது சீசனில் மும்பை அணி கோப்பையை வென்று சாதனை படைத்துள்ளது. இதுவரை 5 போட்டிகளில் மும்பை அணிக்கு கோப்பையை பெற்றுக் கொடுத்த ரோகித் சர்மாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. அதேவேளையில் இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரலும் எழுந்துள்ளது. டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு விராட் கோஹ்லியும், டி20 அணிக்கு ரோகித் சர்மா சர்மாவையும் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்று பல முன்னாள் வீரர்கள் கூறிவருகின்றனர்.
இந்த பரபரப்புக்கு இடையே ஆஸ்திரேலியாவில் தொடங்கவுள்ள போட்டிகளில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டது அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியது. ரோகித் சர்மா நீக்கப்பட்டதற்கு எதிர்ப்பு வலுத்ததை தொடர்ந்து அவர் டெஸ்ட் அணியில் மட்டும் சேர்க்கப்பட்டார். ரோகித்துக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால் ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இருந்து அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக இந்த கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்நிலையில் இந்திய அணிக்கு இரண்டு கேப்டன்கள் தேவையா என்பது குறித்து முன்னாள் வீரர் கபில்தேவ் கூறியது: இந்திய கிரிக்கெட் அணிக்கு 2 கேப்டன்களை நியமிக்க வேண்டும் என்ற கருத்துக்கு என்னால் உடன்பட முடியாது. டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 அணிகளில் இந்தியா 70 முதல் 80 சதவீதம் வரை ஒரே போலத் தான் செயல்பட்டு வருகிறது.
எனவே 2 கேப்டன்களை நியமிப்பது வீரர்களிடையே குழப்பத்தையே ஏற்படுத்தும். வேறுபட்ட எண்ணங்களுடன் களத்தில் இறங்கும் கேப்டன்களை வீரர்களும் விரும்பமாட்டார்கள். மூன்று அணிகளுக்கும் ஒரே கேப்டன்கள் இருந்தால் வீரர்கள் மற்றும் கேப்டனுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். யாராவது ஒரு நிறுவனத்திற்கு இரண்டு சிஇஓக்களை நியமிப்பார்களா? அது போலத் தான் இதுவும். இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே இந்தியா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 27ம் தேதி தொடங்குகிறது. கடந்த சில தினங்களாக இந்திய வீரர்கள் அனைவரும் கடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.