ரோகித் திரும்ப வருகிறார் பூஜாராவின் துணை கேப்டன் பதவி பறிபோனது

by Nishanth, Jan 1, 2021, 20:01 PM IST

காயத்திலிருந்து குணமடைந்து இந்திய அணிக்கு மீண்டும் திரும்பும் ரோகித் சர்மா துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பூஜாராவின் துணை கேப்டன் பதவி பறிபோனது. முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய பின்னர் இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி மனைவியின் பிரசவத்திற்காக ஊருக்கு திரும்பினார். இதனால் அடுத்த 3 போட்டிகளுக்கும் துணை கேப்டன் அஜிங்கியா ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டார். ரோகித் சர்மா காயம் காரணமாக விலகி இருந்ததால் துணை கேப்டனாக பூஜாரா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் காயத்திலிருந்து குணமடைந்த ரோகித் சர்மா மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். அவர் 7ம் தேதி தொடங்க உள்ள 3வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது உறுதியாகிவிட்டது.

அவர் அணியில் இடம் பெற்றால் யாரை நீக்குவது, யாரை சேர்ப்பது என்ற குழப்பம் நிலவுகிறது. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக அவர் களமிறங்கினால் மாயங்க் அகர்வாலுக்கு ஆபத்து ஏற்படும். மத்திய நிலையில் களமிறங்கினால் ஹனுமா விஹாரி வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும். ஆனால் இவர்கள் இருவருக்கும் சிக்கல் ஏற்படுவதற்கு முன்பே துணை கேப்டன் பூஜாராவுக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டது. கோஹ்லி ஊருக்கு திரும்பி விட்டதால் 2வது டெஸ்ட் போட்டியில் துணை கேப்டனாக பூஜாரா நியமிக்கப்பட்டார். இந்நிலையில் ரோகித் சர்மா அணிக்கு திரும்பியதை தொடர்ந்து பூஜாராவிடமிருந்து துணை கேப்டன் பதவி பறிக்கப்பட்டு ரோகித் சர்மாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

3வது டெஸ்ட் போட்டியில் கேப்டன் ரஹானேவுடன் துணை கேப்டனாக ரோகித்தும் அணியில் இருப்பார். பூஜாராவை துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கியதில் பிரச்சினை எதுவும் இல்லை என்று இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ரோகித் சர்மா அணிக்கு திரும்பும் போது அவர் தான் துணை கேப்டனாக இருப்பார் என்று ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. ரோகித் சர்மா ஏற்கனவே ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் துணை கேப்டனாக இருந்துள்ளார். கோஹ்லி அணியில் இல்லாத போது ரோகித் தான் கேப்டனாக செயல்பட்டு வந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

You'r reading ரோகித் திரும்ப வருகிறார் பூஜாராவின் துணை கேப்டன் பதவி பறிபோனது Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை