3வது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு நடராஜனுக்கு வாய்ப்பில்லை மாயங்க் அகர்வால் நீக்கம்

by Nishanth, Jan 6, 2021, 14:56 PM IST

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிட்னியில் நாளை தொடங்க உள்ள மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்படவில்லை. ரோகித் சர்மா அணியில் இடம் பிடித்துள்ளார். அவருக்கு பதிலாக மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தற்போது இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் தற்போது டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்நிலையில் 3வது டெஸ்ட் போட்டி நாளை சிட்னியில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் யார் யார் இடம் பெறுவார்கள் என்ற பரபரப்பு நிலவியது.

காயத்திலிருந்து குணமாகி உள்ள ரோகித் சர்மா அணியில் இடம் பெறுவது உறுதியாகி இருந்தது. அவருக்கு பதிலாக எந்த வீரர் நீக்கப்படுவார் என்ற பரபரப்பு இருந்தது. தொடக்க ஆட்டக்காரராக ரோகித் களமிறங்கினால் மாயங்க்அகர்வாலும், மத்திய நிலையில் களமிறங்கினால் ஹனுமா விஹாரியும் நீக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதே போல உமேஷ் யாதவ் காயம் அடைந்திருப்பதால் அவருக்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன், நவ்தீப் செய்னி மற்றும் ஷார்துல் தாக்கூர் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என கருதப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது இந்திய வீரர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ரோகித் சர்மாவுக்கு பதிலாக மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டுள்ளார். உமேஷ் யாதவுக்கு பதிலாக புதுமுக வீரர் நவ்தீப் செய்னி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மாயங்க் அகர்வால் நீக்கப்பட்டதின் மூலம் ரோகித் சர்மா, சுப்மான் கில்லுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்குவார். ரோகித் சர்மா திரும்பி வந்ததின் மூலம் துணை கேப்டன் பதவி பறிபோன புஜாரா அணியில் உள்ளார். இதேபோல மத்திய நிலையில் ஆடும் ஹனுமா விஹாரியும் தன்னுடைய இடத்தை உறுதி செய்துள்ளார். பும்ரா மற்றும் முகம்மது சிராஜுடன் நவ்தீவ் செய்னியும் களத்தில் உள்ளார். கடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக பந்து வீசிய தமிழக வீரர் அஷ்வினுடன் ஜடேஜாவும் களத்தில் உள்ளார். அணி வீரர்கள் விவரம்: அஜிங்கியா ரஹானே (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), சுப்மான் கில், புஜாரா, ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்தர் அஷ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகம்மது சிராஜ், நவ்தீப் செய்னி.

You'r reading 3வது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் அறிவிப்பு நடராஜனுக்கு வாய்ப்பில்லை மாயங்க் அகர்வால் நீக்கம் Originally posted on The Subeditor Tamil

More Cricket News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை