கோலி தலைமையிலான இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்படும் என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, இந்திய கிரிக்கெட் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. மேலும், அதற்கு பின்னர், டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலும் விளையாடவுள்ளது.
இந்நிலையில், டெஸ்ட் போட்டி குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசிய கவுதம் காம்பீர், விராட் கோலின் டி20 கேப்டன்சி குறித்துதான் நான் சந்தேகமும் கேள்வியும் எழுப்பியிருக்கிறேன். ஆனால், அவருடைய ஒரு நாள் மற்றும் டெஸ்ட் கேப்டன்சி குறித்து எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.கோலி தலைமையிலான இந்திய அணி நிச்சயம் சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்தார்.
இந்திய கிரிக்கெட் அணி இப்போது ஒருவர், இருவரை நம்பி இல்லை. இப்போதுள்ள அணி கோலிக்கு மகிழ்ச்சி தரக்கூடியதாகவே இருக்கும். கோலி ஏற்கனவே, டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடி இருக்கிறார். இப்போது கோலி புத்தம் புதிதாக தன்னை உணர்ந்திருப்பார். இங்கிலாந்துடனான போட்டியில் மகிழ்ச்சியுடன் மீண்டும் விளையாட வருவார் என்று தெரிவித்தார்.
மேலும், ஒவ்வொரு மனிதனுக்கும் குழந்தை பிறப்பது மகிழ்ச்சியை தரக்கூடியது ஒன்று. கோலி அதனை அனுபவித்துவிட்டு கிரிக்கெட் மைதானத்துக்கு திரும்ப இருக்கிறார். கிரிக்கெட்டில் சதமடிப்பது முக்கியமல்ல, அணி வெற்றிப்பெறுவதே முக்கியம். ஆஸ்திரேலியாவில் கோலி பேட் செய்யவில்லை என்பது முக்கியமல்ல, இங்கிலாந்தை வீழ்த்தி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு இந்தியாவை தகுதி பெற வைப்பதே கோலியின் இலக்காக இருக்கும் என்றும் தெரிவித்தார்.