இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பல்லகெலேயில் கடந்த 29-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 7 விக்கெட்டுக்கு 493 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. வங்காளதேச அணி 251 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. 242 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணி 9 விக்கெட்டுக்கு 194 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது. இதன் மூலம் வங்காளதேச அணிக்கு 437 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய வங்காளதேச அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 48 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 177 ரன்கள் எடுத்து இருந்தது. லிட்டான் தாஸ் 14 ரன்னுடனும், மெஹிதி ஹசன் மிராஸ் 4 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
திங்கள் கிழமை 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வெற்றிக்கு மேலும் 260 ரன்கள் தேவை என்ற நிலையுடன் வங்காளதேச அணி தொடர்ந்து ஆடியது. இலங்கை சுழற்பந்து வீச்சாளர்களின் அபாரமான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வங்காளதேச அணியினர் விரைவாக விக்கெட்டுகளை இழந்து வெளியேறினார்கள். வங்காளதேச அணி 2-வது இன்னிங்சில் 71 ஓவர்களில் 227 ரன்னில் ஆல்-அவுட் ஆனது.இதனால் இலங்கை அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து இலங்கை அணியின் அறிமுக சுழற்பந்து வீச்சாளர் பிரவீன் ஜெயவிக்ரமா 178 ரன்கள் விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன் ஆட்டநாயகன் விருதும் பெற்றார்.
இலங்கை அணியின் கேப்டன் கருணாரத்னே தொடர்நாயகன் விருதை சொந்தமாக்கினார். இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.