தான் ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டேன் என்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் அணியைச் சேர்ந்த பலர் அரசியலில் நுழைந்து வருகின்றனர். முன்னாள் இலங்கை அணித்தலைவர் அர்ஜூன ரணதுங்க போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சராக இருக்கிறார்.
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த முன்னாள் அணித்தலைவர் சனத் ஜெயசூரிய இப்போது அரசியலில் இருந்து விலகியிருக்கிறார். இந்தநிலையில்,மகிந்த ராஜபக்சவின் சிறிலங்கா பொதுஜன முன்னணியில், இலங்கை அணியின் முன்னாள் வீரர் திலகரத்ன டில்ஷான், அண்மையில் இணைந்து கொண்டுள்ளார்.
அதேவேளை, மலையகப் பகுதி மக்களின் நலன்களுக்கான சமூக சேவைகளில் ஈடுபட்டுள்ள இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனும், அரசியலுக்கு வரப் போகிறார் என்று செய்திகள் வெளியாகின. ஹட்டனில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில், முத்ததையா முரளிதரனிடம் இதுபற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், தான் ஒருபோதும், அரசியலுக்கு வரமாட்டேன் என்றும், மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அரசியலுக்கு வரத் தேவையில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியலில் தனக்கு அனுபவமோ, அதில் ஈடுபடும் ஆர்வமோ இல்லை எனத் தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன், அண்மையில் இலங்கையில் மகிந்த ராஜபக்ச பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கும் பதில் அளிக்காமல் நழுவினார்