லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைக்க பாஜக விரும்பினாலும் இணைத்துக் கொள்ள நாங்கள் விரும்ப வேண்டும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பது சர்ச்சையாகி உள்ளது.
அதிமுக, அமமுக இரண்டு கட்சிகளையும் இணைத்து ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி வைக்கலாம் என்பது பாஜகவின் திட்டம். இதற்கான முன்னெடுப்புகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.
ஆனால் சசிகலாவை கூட சேர்த்து கொள்வோம்; தினகரனை மீண்டும் சேர்க்கவே முடியாது என முதல்வர் எடப்பாடி தரப்பு திட்டவட்டமாக கூறி வருகிறது. இதனால் அதிமுக அணிகள் இணைப்பு சிக்கலாகி இருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று பேசிய அமைச்சர் ஜெயக்குமார், பாஜக எங்களுடன் கூட்டணி வைக்க விரும்பினாலும் இணைத்துக் கொள்வது குறித்து நாங்கள் விரும்ப வேண்டும் என்றார்.
அமைச்சர் ஜெயக்குமாரின் கருத்து தமிழக அரசியல் களத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.