அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் ராகுல், சக்தி என்னும் சிறப்புத் திட்டத்தை நாடுமுழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்தி, மாவட்ட, வட்டார, கிராம மற்றும் வாக்குச்சாவடி அளவில் செயல்படும் கட்சித் தொண்டர்களை இணைக்கும் முயற்சியை தொடங்கி உள்ளார்.
சென்னையில் வரும் திங்கள்கிழமை சக்தி திட்டத்தின் தொடக்க விழா நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த ஏப்ரல் மாதம் 2018ல் துவங்கப்பட்டு, இதுவரை ஐம்பத்து மூன்று லட்சம் உறுப்பினர்கள் சக்தியில் வெற்றிகரமாக இணைந்துள்ளார்கள். சக்தியில் உறுப்பினர்களை இணைப்பதன் மூலமாக அவர்களுக்கு ஒரு உற்சாகத்தையும், உத்வேகத்தையும் சக்தி திட்டம் துவக்கப்பட்ட மாநிலங்களில் ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையும், நடப்பு செய்திகளையும், தகவல்களையும் உடனுக்குடன் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலும் உள்ள சக காங்கிரஸ் தொண்டர்களிடம் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சக்தியாக இத்திட்டம் விளங்குகிறது. இதன் ஒருபகுதியாக, தமிழ்நாட்டில் சக்தி திட்டம் தற்பொழுது துவங்கப்படவுள்ளது.
இத்திட்டம் இந்தியா முழுவதற்கும் முறைப்படுத்தப்பட்டு தற்பொழுது விரைவுப்படுத்தப் பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகிற 21.01.2019 திங்கள் கிழமை காலை 10.00 மணியளவில் சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ளவர்கள் சக்தியில் இணைய விரும்பினால், தங்களுடைய செல்போன் வழியாக அவர்களது வாக்காளர் அடையாள எண்ணை தமிழகத்திற்கான பிரத்யேகமான எண்ணிற்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்புவதன் மூலமாக சுலபமாக சக்தியில் இணைந்துவிடலாம்.
சக்தியில் இணைய விரும்பும் ஒவ்வொரு உறுப்பினர்களின் தகவல்கள் ஆராய்ந்து சரிபார்க்கப்பட்ட பின்னர்தான் அவர்கள் சக்தியில் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். சக்தியில் இணைபவர்கள் நேரடியாக கட்சி தலைமையுடன் ஒரு தொடர்பை உருவாக்கிக் கொள்ளமுடியும்.
மேலும், உள்ளுர் தலைவர்கள் வாக்குச்சாவடி அளவில் உள்ள தொண்டர்களின் மூலமாக நேரடியாக அப்பகுதி மக்களிடம் ஒரு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு, அவர்களுடைய அடிப்படை பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண தேவையான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
தமிழகத்தில் தொடக்கப்பட இருக்கிற சக்தி திட்டத்தின் மூலம் காங்கிரஸ் கட்சியின் அடித்தளமாக விளங்குகிற தொண்டர்களின் கருத்தை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிந்து கொள்வதற்கும், காங்கிரஸ் கட்சியினரிடையே கருத்துப்பறிமாற்றம் நிகழ்த்துவதற்கும், செயல்திட்டங்கள் வகுப்பதற்கும் மிகப்பெரிய வாய்ப்பு உருவாக்கப்பட இருக்கிறது.
சமூக ஊடகங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்படுகிற அவதூறு பிரச்சாரங்களை முளையிலேயே முறியடிப்பதற்கு சக்தி திட்டம் ஒரு அரிய வாய்ப்பாக அமையும். இதன்மூலம் காங்கிரஸ் கட்சியில் அனைத்துத் தரப்பினரின் கருத்தை அறியவும், தொண்டர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கவும் அதன்மூலம் கட்சியில் உண்மையாக உழைப்பவர்களிடையே ஒரு சமநிலைத்தன்மையை உருவாக்கவும் சக்தி திட்டம் மிகப்பெரிய அளவில் துணைபுரிய இருக்கிறது.
சமீபத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்ற மாநிலங்களில் யாரை முதலமைச்சராக தேர்வு செய்யவேண்டும் என்கிற முயற்சியில் சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களின் கருத்தை அறிந்த அதே நேரத்தில் சக்தி திட்டத்தின் மூலமாக அடிநிலை தொண்டர்களின் எண்ணத்தை அறிகிற அணுகுமுறையை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடைபிடித்ததை இங்கு நினைவுகூற விரும்புகிறேன். மேலும், எதிர்காலத்தில் நாடாளுமன்ற, காங்கிரஸ் வேட்பாளர்களை தேர்வு செய்கிற பொழுது சக்தி திட்டத்தின் பங்களிப்பு பிரதானமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே சக்தி திட்டத்தை தமிழகத்தில் வெற்றிகரமாக உருவாக்கி காங்கிரஸ் கட்சியினரிடையே இதனை ஒரு இணைப்புப்பாலமாக அமைத்திட இதில் பெருமளவில் தங்களை பதிவு செய்து பங்கேற்குமாறு அழைக்கிறேன்.
இவ்வாறு திருநாவுக்கரசர் கூறியுள்ளார்.