தேர்தலுக்குத் தொகுதிக்கு ரூ50 கோடி என செலவிடத் திட்டமிட்டுள்ளனர் அதிமுக அமைச்சர்கள். ஒவ்வொரு எம்எல்ஏ தொகுதிக்கும் ரூ5 கோடி என சராசரியாக ரூ30 கோடி செலவிட இருக்கிறார்களாம்.
கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்து செலவிட முடிவு செய்திருக்கிறார் எடப்பாடி. இதனை அறிந்து உற்சாகத்தில் இருக்கிறது பாமகவும் தேமுதிகவும்.
தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட்டணி அறிவிப்பை வெளியிட இருக்கிறது அதிமுக. இதைப் பற்றிப் பேசும் தேமுதிகவினர், ' தேர்தல் வரும்போது தினகரன் அணியில் இருப்பதைத்தான் பிரேமலதா விரும்பினார். அவர் தன்னுடைய கஜானாவில் இருந்து பெருவாரியான பணத்தை வாரியிறைப்பார் என நம்பினார்.
ஆனால் அந்தக் கட்சி நிர்வாகிகள் ஒவ்வொருவரும் பணத்தைக் காரணம் காட்டி வெளியேறிக் கொண்டிருப்பதை அவர் எதிர்பார்க்கவில்லை. தன்னுடைய கையில் இருந்து பத்து பைசாவைக் கூட கண்ணில் காட்டாமல் தினகரன் ஏமாற்றி வருவதை அறிந்து கொண்டார்.
அவரை நம்பிப் போனால் கடைசி நேரத்தில் நம்முடைய பணத்தில் கை வைத்துவிடுவார் எனப் பயப்பட்டார். அதனால்தான் அமமுக தூதுக்குப் பதில் சொல்லாமல் காலம் கடத்தினார். 'வைட்டமின் ப' வைக் களமிறக்க எடப்பாடி சம்மதித்துவிட்டதால், கூடுதல் உற்சாகத்தில் இருக்கிறார் பிரேமலதா' என்கிறார்கள்.