சோத்துப்பானை சின்னம் போச்சோ... அமமுக பின்னடைவுக்கு அதிமுகவின் நமது அம்மா குதூகலம்

Namadhu amma comment on AMMK Cooker Symbol issue

by Mathivanan, Jan 25, 2019, 11:03 AM IST

அமமுகவுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ஏடான ‘நமது அம்மா’ நாளிதழ் குதூகலத்துடன் வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக நமது அம்மா நாளிதழில் எழுதப்பட்டுள்ளதாவது:

திகார்கரனின் குக்கர் சின்னத்தை தேர்தல் ஆணையம் பறித்திருக்கிறது.

பதிவு செய்யப்படாத ஒரு கட்சி, தங்களுக்கு இதைத்தான் சின்னமாக ஒதுக்க வேண்டும் என உரிமை கோர முடியாது என்னும் அடிப்படையில் கூறுகெட குக்கர்களுக்கு சோத்துப்பானைச் சின்னம் மறுக்கப்பட்டிருக்கிறது.

அண்ணா திமுகவை அழிப்பேன், இரட்டை இலையை ஒழிப்பேன் என்றெல்லாம் இறுமாப்பு பேசியலைந்த முட்டைப் போண்டாவின் ஆணவத்திற்கு இந்நிகழ்வு சாட்டையடி சம்பவமே.

மன்னாதி மன்னனாம், மஞ்சள் நிறத்து கர்ணனாம், எண்ணியது செய்திடல் வேண்டும்.. அதில் புண்ணியமெ நிறைந்திட வேண்டும். நினைத்ததெல்லாம் நடக்க வேண்டும்; நீதிக்கே தலைவணங்கி நடக்க வேண்டும் என்றெல்லாம் போதித்த போதி தர்மன், தன் குருதியிலே விதையூன்றி, உருவாக்கிய கொள்கை பேரியக்கத்தை அழித்தொழிப்பேன் என்று ஒரு பெஃரா பேர்வழி ஆணவம் தலைக்கேறி கொக்கரித்ததற்கு காலம் கொடுத்திருக்கும் கசையடி இது..

அதுசரி புரட்சித்தலைவர் உருவாக்கிய இயக்கத்தை அழிப்பேன் என்பவர்... எனக்குப் பின்னாளும் நூறாண்டுகள் ஆனாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தான் இத்தமிழுலகை ஆளும், தழைத்தோங்கி வாழும் என புனிதமிக்க பேரவையில் கடைசி சூளுரையாகப் பதித்துப் போன அம்மாவின் இயக்கத்தை மூழ்கும் டைட்டானிக் கப்பல் என்று விமர்சிப்பவ்ர் இனியும் புரட்சித் தலைவரால் வடிவமைக்கப்பட்ட அண்ணா திமுக வேட்டியை கட்டலாமா?

அம்மாவின் திருமுகத்தை ஆமமூக்கன் கட்சியின் கொடியில் பயன்படுத்தலாமா? அதற்கு பதிலாக மிடாஸ்கரன் அவரோட அம்மாவின் முகத்தை தன் கட்சிக் கொடியில் அச்சடித்துக் கொண்டு அலையலாமே..

அதை விட்டுவிட்டு கழகத்தின் வண்ணத்தை கொடியிலும் வேட்டியிலும் பயன்படுத்திக் கொண்டே கழகத்தை அழிப்பேன் என்று ஊளையிடுவது கோமாளிக்காரியம் அல்லவா?

இவ்வாறு நமது அம்மா நாளிதழில் எழுதப்பட்டுள்ளது.

You'r reading சோத்துப்பானை சின்னம் போச்சோ... அமமுக பின்னடைவுக்கு அதிமுகவின் நமது அம்மா குதூகலம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை