2015-ல் நடந்த முதலாவது உலக முதலீட்டாளர் மாநாட்டால் என்னென்ன பலன் கிடைத்தது? என்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக 2-வது உலக முதலீட்டாளர் மாநாடு சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தி முடித்துள்ளது தமிழக அரசு .இதில் 3 லட்சத்து 431 கோடிக்கு புதிய முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலக முதலீட்டாளர் மாநாடு ஆடம்பரமாக அதிக பொருட்செலவில் நடத்தப்படுகிறது. ஏற்கனவே 2015-ல் நடத்தப்பட்ட முதலாவது மாநாடும் இதே போன்று நடத்தப்பட்டது. ஆனால் என்ன பலன் கிடைத்தது என்ற தகவல்கள் இல்லை.
எனவே உலக முதலீட்டாளர் மாநாடு குறித்து விதிமுறைகளை வகுக்க உத்தரவிடக் கோரி தனியார் நிறுவனம் ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்ய நாராயணா, ராஜமாணிக்கம் அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 2015-ல் நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் என்னென்ன தொழிற்சாலைகள் வந்துள்ளன.
எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்தது என்ற விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.