தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்கள் மேல் முறையீடு செய்வதற்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்து விட்டது.
இடைத்தேர்தல் மக்களைவைப் பொதுத் தேர்தலுடன் நடைபெறுமா? முன்கூட்டியே நடத்தப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லும் என்ற தீர்ப்பை நீதிபதி சத்ய நாராயணா கடந்த அக்டோபர் 25-ந் தேதி வழங்கினார். தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில்லை என பதவி இழந்த தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் கூறினாலும் அப்பீலுக்கான 3 மாத கால அவகாசத்தை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் இடைத்கேர் தலை நடத்தவில்லை. அந்த அவகாசம் நேற்று டன் முடிந்து விட்டது. தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டதில் இருந்து 6 மாதத்திற்குள் இடைத் தேர்தல் நடத்த வேண்டும் என்பது தேர்தல் ஆணைய விதி.அதன்படி வரும் ஏப்ரல் 24-ந் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே கஜாபுயல் காரணமாக திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது. காலியாக உள்ள திருப்பரங்குன்றத்திற்கு வழக்கு காரணமாக இடைத்தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. குற்ற வழக்கில் சிறைத் தண்டனை பெற்று எம்எல்ஏ தகுதியிழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் ஓசூர் தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது. இவற்றையெல்லாம் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டி இருக்கிறது. இதனால் காலியாக உள்ள தொகுதிகளில் இடைத்தேர்தல் மக்களவைத் தேர்தலுடனா? முன்கூட்டியேவா? என்பது ஒரிரு நாளில் தெரிய வாய்ப்புள்ளது.