லோக்சபா தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லை. கூட்டணி களத்தில் தனித்துவிடப்பட்டுள்ள தினகரன் தடாலடியாக காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகளை வளைத்து மெகா கூட்டணிக்கான வியூகம் வகுத்து களமிறங்கியுள்ளாராம்.
திமுக கூட்டணியில் இணைவதை தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திருநாவுக்கரசர் ஒருபோதும் விரும்பியதில்லை. டெல்லி மேலிடத்தின் நெருக்கடியால் திமுக கூட்டணியில் பட்டும் படாமல் இருந்து வருகிறார் திருநாவுக்கரசர்.
தினகரனைப் பொறுத்தவரையில் திருநாவுக்கரசர் மூலமாக காங்கிரஸ் மற்றும் ரஜினிகாந்தை கூட்டணிக்கு கொண்டு வந்துவிடலாம்.. விடுதலை சிறுத்தைகளும் எப்படியும் தங்கள் பக்கம் வந்துவிடும் என கணக்குப் போட்டுதான் பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
ஆனால் கடந்த சில மாதங்களாக அரசியல் களத்தின் தட்பவெப்ப நிலை வேறாகிப் போனது. திமுக- காங்கிரஸ் கூட்டணி உறுதியானது; ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என ஸ்டாலின் அறிவித்தார். அடுத்த கட்டமாக கொல்கத்தாவில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட பேரணியில் ஸ்டாலினும் பங்கேற்றார்.
அதேபோல் அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தேமுதிக இடம்பெறும் சூழல் உருவாகி உள்ளது. இதனால் தினகரன் தனித்துவிடப்படுகிற நிலை ஏற்பட்டது. திமுகவின் சீனியர்கள் தினகரனின் நிலையை ஏளனமாக விமர்சிக்கவும் தொடங்கினர்.
இதனால் கொந்தளித்துப் போனார் தினகரன். இதையடுத்து மீண்டும் திருநாவுக்கரசை அண்மையில் தினகரன் சந்தித்து பேசினார். அப்போது, என்ன செய்தாலும் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் விலகி அமமுக அணியில் இணைய வேண்டும்; விடுதலை சிறுத்தைகளுடன் பேசிவிட்டோம். அவர்கள் வர தயாராக இருக்கிறார்கள். நாம் வலிமையான கூட்டணி அமைத்தால் திமுக தோற்கும்; ஆட்சி அதிகாரம் நமக்கு வரவும் வாய்ப்பிருக்கிறது; அப்படி வந்தால் காங்கிரஸுக்கும் ஆட்சியில் பங்கு என மேலிடத்திடம் மீண்டும் நெருக்கடி கொடுங்கள் என அழுத்தம் கொடுத்திருக்கிறாராம் தினகரன்.
மனப்புழுக்கத்தில் இருந்த திருநாவுக்கரசரும் இதுதான் வாய்ப்பு என மீண்டும் டெல்லிக்கு படையெடுக்கும் முடிவில் இருக்கிறாராம்!
-எழில் பிரதீபன்