பிரதமர் மோடியின் மதுரை வருகைக்கு ஆதரவும், எதிர்ப்பும் என பரபரப்பாகி இருக்கும் நிலையில் உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
தென் மாவட்ட மக்களின் நீண்டகால கனவு மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்பது தான். பல்வேறு இழுபறிக்குப் பின் மத்திய அரசு ஒப்புதல் வழங்கி ரூ.1264 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மதுரை தோப்பூரில் அமையவிருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதற்கான விழா மதுரை விமான நிலையம் அருகே மண்டேலா நகரில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட திடலில் காலை 11.30 மணிக்கு நடக்கிறது.
இதில் பங்கேற்பதற்காக காலை 11.15 மணிக்கு பிரதமர் மோடி தனி விமானத்தில் வருகிறார். எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா முடிந்ததும் அருகிலேயே அமைக்கப்பட்டுள்ள மேடையில் பாஜக பிரசார பொதுக்கூட்டத்திலும் பங்கேற்கிறார். மோடியின் வருகைக்கு ஆதரவு, எதிர்ப்பு என சமூக வலைதளங்களில் பெரும் வார்த்தைப்போரே நடந்து வருவதால் மதுரையில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மோடியின் வருகையை எதிர்த்து மதிமுக சார்பில் கருப்புக்கொடி போராட்டத்தை அறிவித்துள்ளார் வைகோ . மேலும் சில அமைப்புகளும் கருப்புக்கொடி காட்டப் போவதாக அறிவித்துள்ளதால் மதுரை மற்றும் விழா நடைபெறும் பகுதி போலீசாரின் தீவிர கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.