மாபெரும் புரட்சியாளர் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைவு நாட்டின் பேரிழப்பு- நெருங்கிய நண்பர் வைகோ உருக்கம்

மாபெரும் புரட்சியாளர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் மறைவு நாட்டின் பேரிழப்பு என மதிமுக பொதுச்செயலர் வைகோ உருக்கமான இரங்கல் தெரிவித்துள்ளார்.

வைகோ வெளியிட்டுள்ள இரங்கல்:

இந்திய நாட்டின் ஜனநாயகத்தைக் காக்க, தொழிலாளர்களைக் காக்க தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் புரட்சியாளர்தான் ஜார்ஜ் பெர்ணான்டஸ் அவர்கள் ஆவார். இலட்சோப இலட்சம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றவராக மராட்டிய மாநிலத்தில் அவர்களின் உரிமையைக் காக்க போராடி வென்றார்.

அனைத்து நாடுகள் சோசலிச அமைப்பின் நிர்வாகியாகத் திகழ்ந்தார். இந்திய நாட்டின் வரலாற்றையே உலுக்கிய 1974 ரயில்வே தொழிலாளர் வேலை நிறுத்தத்தை தலைமை தாங்கி நடத்தினார். பலமுறை காவல்துறை அடக்குமுறைக்கு ஆளாகி தாக்கப்பட்டார். அப்படி ஒருமுறை அவர் தலையில் விழுந்த குண்டாந்தடி அடிதான் கடந்த ஒன்பது ஆண்டுகளாக அவர் நினைவில்லாமல் படுத்த படுக்கையாக துணைவியார் லைலா கபீர் அவர்களின் பராமரிப்பில் இருந்தார்.

1975 ஜனவரி 25 நள்ளிரவில் பிரகடனம் செய்யப்பட்ட நெருக்கடி நிலை சர்வாதிகார காலத்தில் தலைமறைவு புரட்சி வாழ்வு நடத்தினார். பின்னர் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டு, பரோடா டைனமிக் வழக்கில் குற்றவாளியாக காவல்துறை வழக்குப் போட்டது. கைகளுக்கும் கால்களுக்கும் விலங்கு போட்டுத்தான் அவரை நீதிமன்றத்துக்கு அழைத்து வந்தது. லோகநாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணன் அவர்களின் அடுத்த இடத்தில் இந்திய நாட்டின் புரட்சிகர நாயகனாகத் திகழ்ந்தார்.

1977 இல் நாடாளுமன்றத் தேர்தலில் பீகார் மாநிலத்தில் மிசாபூர் தொகுதியில் மூன்றரை இலட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். அமைச்சர் பதவியை ஏற்க மறுத்தார். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கட்டாயப்படுத்தியதால் அமைச்சரானார். நெருக்கடி நிலை காலத்தில் அவர் தலைமறைவு வாழ்க்கை நடத்தியபோது, 1975 இல் முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் டாக்டர் கலைஞர் அவர்கள் பெர்ணான்டஸ் தலைமறைவாக இருப்பதற்கு பெரிதும் உதவினார். ஜார்ஜ் பெர்ணான்டஸ் இல்லம் திபெத் அகதிகளுக்கு புகழிடமாயிற்று.

1978 முதல் அவர் உயிர் நண்பனானேன். பின்னர் உடன் பிறவாத தம்பியாகவே என் மீது பாசம் கொண்டார். விடுதலைப் புலிகளுக்கும், தமிழ் ஈழத்துக்கும் அவர் செய்த உதவிகள் கொஞ்ச நஞ்சம் அல்ல. எண்ணில் அடங்காதவை.

பிரதமர் வாஜ்பாய் ஆட்சியில் ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக புலிகளுக்கு அவர் கவசமாகத் திகழ்ந்து செய்த உதவிகளை எண்ணும்போதே என் கண்களில் கண்ணீர் வடிகிறது. 2001 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சென்னையில் என் இல்லத்தில் மூன்று நாள் தங்கியிருந்தார். நான் பொடா கைதியாக வேலூர் மத்திய சிறையில் இருந்தபோது, டெல்லியிலிருந்து வந்து மூன்றுமுறை என்னை சிறையில் சந்தித்தார்.

விடுதலைப் புலிகளுக்குச் சென்ற கப்பலை சர்வதேச கடலில் இந்தியக் கடற்படை தடுக்க முயன்றதை பெர்ணான்டஸ் கவனத்துக்குக் கொண்டுசென்ற உடன் அவரும், பிரதமர் வாஜ்பாய் அவர்களும் அதன்பின் அப்படி ஒரு சம்பவம் நடக்காமல் தடுத்தனர். அவர் உடல்நலம் குறைந்து, நினைவு இழந்தபின் கடந்த எட்டு ஆண்டுகளில் இருபது முறை அவர் வீட்டுக்குச் சென்று அவர் படுக்கைக்குப் பக்கத்திலேயே உட்கார்ந்து அழுதுகொண்டு இருப்பேன். அதனால்தான் அவரது துணைவியார் லைலா கபீர் பெர்ணான்டஸ் அவர்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு கொடுத்து பேட்டியில், இந்தியாவிலேயே ஜார்ஜ் பெர்ணான்டசின் உயிர் நண்பர்களில் வைகோதான் முதன்மையானவர் எனக் கூறினார். அவர் என்னிடம் காட்டிய அன்பையும், பாசத்தையும் நினைக்கும்போதே நெஞ்சு வெடித்துவிடும் போல் இருக்கிறது.

ஈழத்தமிழர் இனப்படுகொலையைத் தடுக்க 2009 இல் இதே நாளான ஜனவரி 29 இல் வீரத் தியாகி முத்துக்குமார் தீக்குளித்து மடிந்த அதே நாளில் என் உடன்பிறவாத அண்ணன், நான் உயிரினும் மேலாக நேசித்த அண்ணன் ஜார்ஜ் பெர்ணான்டஸ் மறைந்தார் என்ற செய்தி அறிந்து நிலைகுலைந்துபோனேன். ஈழத்தமிழர் வரலாற்றிலும், இந்திய ஜனநாயக வரலாற்றிலும் அழியாத புகழ் ஒளியாக ஜார்ஜ் பெர்ணான்டஸ் நிலைத்து இருப்பார்.

அவரது துணைவியாருக்கும், புதல்வருக்கும், உற்றார் உறவினருக்கும், அவரை நேசிக்கும் இலட்சோப இலட்சம் தோழர்களுக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், ஈழத் தமிழர்கள் சார்பில் கண்ணீர் அஞ்சலியை, வீரவணக்கத்தைத் தெரிவிக்கிறேன்

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!