லோக்சபா தேர்தலை முன்வைத்து தமிழக அரசியல் களத்தில் கூட்டணி விளையாட்டுகள் தகிக்க தொடங்கிவிட்டது.
இந்நிலையில் டெல்லியில் மத்திய பாஜக அமைச்சர் ஸ்மிருதி ரானியுடன் கை கோர்த்து திமுக எம்.பி. கனிமொழி ‘இளம்பிராய’த்து நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.
லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையில் மெகா கூட்டணி அமையுமா? காங்கிரஸ் மெகா கூட்டணியை உருவாக்குமா? மாநில கட்சிகள் இணைந்து வலிமையான அணியை உருவாக்குமா? என்பது தேசிய அளவிலான விவாதம். தமிழகத்தில் திமுக, அதிமுக தலைமையில் மெகா கூட்டணி உதயமாகுமா? தினகரன் புதிய அணியை உருவாக்குவாரா? என்கிற விவாதம் களைகட்டுகிறது.
இந்நிலையில் மத்திய அமைச்சர் ஹர்ஸ்மிரத் கவுர் தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ரானி, சரத்பவார் மகள் சுப்ரியா, திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கரம் கோர்த்து சிறு பிள்ளைகள் போல நடனமாடிய காட்சி அதில் இடம்பெற்றுள்ளது.
அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் பெண் எம்.பிக்கள் கை கோர்த்து நடனமாடிய வீடியோதான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.