தமிழகத்தின் ஆதி கலைகள் பெரும்பாலானவை கைவிடப்பட்டுவிட்டன. பறை இசைத்தலை சாதிய வட்டத்துக்குள் அடைத்துவிட்டனர். தெருநாடகங்கள், தெருக்கூத்துகள் அரிதாகிப் போய்விட்டன.
தென் தமிழகத்தில் கோவில் திருவிழாக்களில், ஊர் விழாக்களில் புராண நாடகங்கள் கட்டாயம் இடம்பிடித்த காலம் மலையேறிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில நாடகங்கள்தான் நடைபெறுகின்றன.
ஆனால் வடதமிழகத்தில் தெருக்கூத்து இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகிறது. தெருக்கூத்து உயிர்ப்போடு இருக்கிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக சமூக வலைதளங்களில் நேரலையாகவும் ஒளிபரப்பு செய்து வருகின்றனர்.
கர்ணன்-மோட்சம், பப்பரவாகணன் சண்டை, பாதாள அரக்கண் (அ) போகவதி திருமணம், ஹிரணிய விலாசம், அபிமன்யு சுந்தரி திருக்கல்யாணம், தச்சன் யாகம் என நாள்தோறும் வடதமிழக கிராமங்கள் தெருக்கூத்து கலையை உயிர்ப்பித்து வருகின்றனர்.
பறை இசைக் கலையை மீட்க ஏராளமான குழுக்கள் உருவானதைப் போல தெருக்கூத்துவை பரந்துபட்ட அளவில் வளர்த்தெடுக்கவும் அமைப்புகள், இயக்கங்கள் முன்வர வேண்டும் என்பதே கலை ஆர்வலர்களின் கோரிக்கை.