தமிழக முன்னேற்றத்துக்கு 100 சிறப்பு அம்சங்களுடன் 17-வது நிழல் நிதி அறிக்கை வெளியிட்ட பாமக!

PMK presents 17th shadow budget

by Mathivanan, Feb 6, 2019, 15:44 PM IST

தமிழக முன்னேற்றத்துக்கான 100 சிறப்பு அம்சங்களுடன் 17-வது நிழல் நிதி அறிக்கையை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் சென்னையில் இன்று வெளியிட்டார்.

சென்னையில் பாமக தலைமை அலுவலகத்தில் நிழல் நிதி அறிக்கையை ராமதாஸ் வெளியிட்டார். அதில், சுற்றுலா துறை, தமிழ் வளர்ச்சி, பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, லோக் அயுக்தா என்பது உள்ளிட்ட 100 சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

பாமக நிழல் நிதி அறிக்கையின் 25 முக்கிய அம்சங்கள்:

1. 2019-20 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் வருவாய் வரவுகள் ரூ.4,21,026 கோடியாக இருக்கும். இது கடந்த ஆண்டின் மொத்த வருவாயை விட ரூ.1,90,509 கோடி அதிகமாக இருக்கும். 2019-20 ஆம் ஆண்டில் தமிழக அரசின் வருவாய்க் கணக்கில் ரூ.69,823 கோடி உபரியாக இருக்கும். நிதிப்பற்றாக்குறை ரூ.6,789 கோடி என்ற அளவில் மிகமிகக் குறைவாக இருக்கும்.

2. வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழித்தல், வறுமை ஒழிப்புக்காக ஏழைகளுக்கு நிதியுதவி, தொழில் வளர்ச்சியை அதிகரித்தல், பாசனப் பரப்பை இருமடங்காக்குதல், வெளிப்படைத்தன்மை, நிர்வாக சீர்திருத்தம், விவசாயம், கல்வி, அரசின் வருவாயை அதிகரித்தல் ஆகிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளித்து தயாரிக்கப்பட்டுள்ளது.

3. இந்தியாவில் வேலையில்லாத் திண்டாட்டம் 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 6.1% என்ற உச்சத்தை எட்டியிருக்கும் நிலையில், தமிழகத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. இதற்காக சிறப்புப் பணிக்குழு ஒன்றை தமிழக அரசு அமைக்கும்.

4. மனிதவள மேம்பாட்டு வல்லுநர்கள், பொருளாதார வல்லுநர்கள் உள்ளிட்டோர் இக்குழுவில் இடம்பெறுவர். 3 மாதங்களில் குழு அறிக்கை அளிக்கும். அதில் இடம்பெற்றுள்ள பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழகத்தில் வேலைவாய்ப்பைப் பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

5. படித்துவிட்டு 5 ஆண்டுகளுக்கும் மேலாக வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு உதவும் வகையில், அவர்களுக்கான உதவித்தொகை உயர்த்தப்படுகிறது. அதன்படி, மாதம் ரூ.5,000 வரை உதவித்தொகை வழங்க அரசு தீர்மானித்துள்ளது. உதவித்தொகை விவரம்:

6. தமிழ்நாட்டில் வறுமையை முற்றிலுமாக ஒழிக்க மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரைப்பதற்காக வறுமை ஒழிப்பு ஆணையம் அமைக்கப்படும். இதன் தலைவராக பொருளாதார வல்லுநர் ஒருவர் நியமிக்கப்படுவார்.

7. வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள மக்களை வறுமையிலிருந்து மீட்கும் நோக்குடன் அடிப்படை வருமானத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்படும். தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் சுமார் 35 லட்சம் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,500 வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.10,500 கோடி செலவாகும்.

விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10,000 மூலதன மானியம்

8. விவசாயிகள் கடன் சுமையில் சிக்குவதை தவிர்க்கவும், வேளாண்மையை இலாபம் தரும் தொழிலாக மாற்றவும், சிறு, குறு விவசாயிகளுக்கு மூலதன மானியம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்த அரசு திட்டமிட்டிருக்கிறது.

9. மூலதன மானியத் திட்டத்தின்படி ஒவ்வொரு சிறு, குறு விவசாயிக்கும் ஒரு ஏக்கருக்கு, ஒரு பருவத்திற்கு ரூ.5,000 வீதம் ஆண்டுக்கு இரு பருவங்களுக்கு ரூ.10,000 மானியம் வழங்கப்படும்.

10. ஐக்கிய நாடுகள் அமைப்பின் சார்பில் 2016 ஆம் ஆண்டில் தொடங்கி, 2030 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு நாடும் 17 குறிக்கோள்களை எட்ட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான உடன்பாட்டில் இந்திய அரசு கையெழுத்திட்டிருக்கிறது.

11. அந்த உடன்பாட்டின்படி, மொத்தம் 169 இலக்குகள் எட்டப்படவேண்டும். அவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் எட்டிமுடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் தலைமையில் தனி அமைச்சரவைக் குழு அமைக்கப்படும்.

12. மக்களவைத் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் மே மாத இறுதியில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கை வெளியிடப்படும். ஜூலை மாதத்தில் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும்.

13. தமிழகத்தின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த "வளரும் தமிழகத்திற்கு வலிமையான கட்டமைப்பு - 2025" என்ற பெயரில் புதிய தொலைநோக்குத்திட்டம் செயல்படுத்தப்படும்.

14. இதற்காக அடுத்த 6 ஆண்டுகளில் ரூ.10 லட்சம் கோடி செலவிடப்படும். இதில், அரசின் பங்காக ஆண்டுக்கு ரூ.50,000 கோடி வீதம் மொத்தம் ரூ.3 லட்சம் கோடி செலவிடப்படும். மீதமுள்ள முதலீடு தனியார் நிறுவனங்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் பெறப்படும்.

15. சென்னை - சேலம் இடையே 8 வழிச் சாலைக்காக 7,000 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டால், 10,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். வளர்ச்சி என்பது வாழ்வாதாரங்களை அழிப்பதாக இருக்கக்கூடாது என்பதால், இத்திட்டம் கைவிடப்படும்.

16. பெண் குழந்தைகளை சுமையாக பெற்றோர் நினைக்கும் நிலையை மாற்றும் வகையில், 2019 - 20 நிதியாண்டு முதல் சிறப்பு ஊக்குவிப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

17. 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிறக்கும் பெண் குழந்தைகளுக்கு அவர்களின் 18 ஆவது வயதில் ரூ.5 லட்சம் கிடைக்கும் வகையில் அவர்கள் பெயரில் வங்கிகளில் குறிப்பிட்ட தொகை வைப்பீடு செய்யப்படும்.

18. தமிழ்நாட்டில் 18 வயது நிறைவடைந்த கல்லூரி மாணவ - மாணவியருக்கு கல்லூரிகள் மூலமாக முதலில் பழகுநர் உரிமமும், அடுத்த 6 மாதங்களில் அவர்கள் வாகனங்களை ஓட்டிப் பழகியபின்னர், ஓட்டுநர் உரிமமும் வழங்கப்படும்.

19. இந்த நடவடிக்கை மூலம் மாணவர்கள் மிகவும் எளிதாக ஓட்டுநர் உரிமம் பெறுவது மட்டுமின்றி, உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டும் வழக்கமும், விபத்துக்களும் பெருமளவில் குறையும்.

20. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலை கேட்டு காத்திருக்கும் 72.26 லட்சம் இளைஞர்களில் சுய தொழில் தொடங்க விருப்பம் உள்ளவர்களுக்கு ரூ. 5 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இதற்காக சுயதொழில் முதலீட்டுக் கழகம் என்ற புதிய அமைப்பு தொடங்கப்படும்.

21. சென்னையில் பெருநகர தொடர்வண்டித் திட்டத்தின் முதல் கட்டப் பணிகள் அனைத்தும் நிறைவேற்றி முடிக்கப்பட்டுவிட்டன. சென்னை டி.எம்.எஸ். முதல் வண்ணாரப்பேட்டை வரையிலான பெருநகர தொடர்வண்டி சேவை அடுத்த சில நாட்களில் தொடங்கப்படும்.

22. இரண்டாம் கட்டமாக, 107.55 கிலோமீட்டர் நீளத்திற்கு மாதவரம் & சோழிங்கநல்லூர், மாதவரம் & சிறுசேரி சிப்காட், கலங்கரை விளக்கம் - கோயம்பேடு பேருந்து நிலையம் ஆகிய 3 வழித் தடங்களில் பெருநகர தொடர்வண்டிப் பாதைகள் அமைக்கப்படும்.

23. 2019&20 ஆண்டில் ஒரு டன் கரும்புக்கான கொள்முதல் விலை ரூ.5,120 ஆக நிர்ணயிக்கப்படும்.

24. 2019&20 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2,911 என நிர்ணயிக்கப்படும்.

25. தமிழக அரசின் சார்பில் செயல்படுத்தப்படவிருக்கும் நீர்ப்பாசன பெருந்திட்டங்கள், வேளாண் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், கூட்டுறவு உணவகங்கள், நீரா விற்பனை நிலையங்கள் ஆகியவற்றின் மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் 30 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இளைஞர்களுக்கு நல்ல ஊதியத்துடன் கூடிய வேலை கிடைக்கும். வேலை தேடி நகரப்பகுதிகளுக்கு இடம்பெயர்வது தவிர்க்கப்படும்

You'r reading தமிழக முன்னேற்றத்துக்கு 100 சிறப்பு அம்சங்களுடன் 17-வது நிழல் நிதி அறிக்கை வெளியிட்ட பாமக! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை