அதிகாரத்தை மீண்டும் கைப்பற்றும் வெறியில் பாஜக.... முரசொலி நாளேடு கடும் சாடல்

Advertisement

மத்தியில் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்கிற வெறியில் பாஜக செயல்பட்டு வருவதாக திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி சாடியுள்ளது.

முரசொலியின் இன்றைய தலையங்கம்:

மத்திய பா.ஜ.க. அரசுக்கு ஏற்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்தல் காய்ச்சல் பற்றி தொடர்ந்து எழுதி வருகின்றோம். நாளாக நாளாகப் பித்தம் தலைக்கேறி மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்ற ஆத்திரத்தில் பா.ஜ.க.வின் மத்திய அரசு எதை வேண்டுமானாலும் செய்யும். பா.ஜ.க.விடம் ஜனநாயகத்தையோ, மாநில உரிமைகளையோ எதிர்பார்க்க முடியாது என்பதை உறுதி செய்யும் விதமாக கொல்கத்தா மாநகர காவல்துறை ஆணையர் ராஜீவ்குமாரிடம் சாரதா நிறுவன வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் அவரின் வீட்டிற்குச் சென்று இருக்கிறார்கள். அப்போது மேற்கு வங்க போலீஸ் அவர்களை கைது செய்தது. இதனால் சர்ச்சை எழுந்தது. கடந்த 5 ஆண்டுகளாக நடக்கும் வழக்கில் இப்போது விசாரணை ஏன்? நாடாளுமன்றத் தேர்தல்தான்!

இதனால் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மத்திய அரசை எதிர்த்து சம்பவம் நிகழ்ந்த இரவே, 'அரசமைப்புச் சட்டத்தைக் காப்போம்' எனும் முழக்கத்தோடு தர்ணா போராட்டத்தில் ஈடுபடலானார். இத் தலையங்கம் எழுதிக் கொண்டு இருக்கிற போது தர்ணா போராட்டம் நடைபெற்றுக் கொண்டு இருந்தது. 9-ஆம் தேதி தேர்வுகள் நடைபெற இருப்பதால் 8 ஆம் தேதி - வெள்ளிக்கிழமை வரை தர்ணா நடைபெறும் என்று மம்தா அறிவித்து இருந்தார். மு.க.ஸ்டாலின், 'இந்திய கூட்டாட்சித் தத்துவத்தைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படும் மத்திய பா.ஜ.க. அரசை எதிர்த்து மம்தா நடத்தி வரும் போராட்டத்திற்கு முழு ஆதரவை அளிக்கிறேன்' என்று தமது கருத்தை தெரிவித்தார். கனிமொழி எம்.பி. யை நேரில் அனுப்பி தமது ஆதரவை தெரிவிக்கச் செய்து இருக்கிறார் ஸ்டாலின்.

இந்தியாவிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தத்தமது ஆதரவினைத் தெரிவித்து இருக்கின்றனர். இதற்கிடையில் மத்திய அரசின் சி.பி.ஐ. கொல்கத்தா மாநகர காவல் ஆணையரை விசாரிக்க அனுமதிகோரி வழக்கைத் தாக்கல் செய்து இருந்தனர். வழக்கை விசாரிக்க மட்டும் அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம் ஆணையரைக் கைது செய்யக் கூடாது எனவும் பிப்.5ஆம் தேதி நண்பகலில் தடை உத்தரவை பிறப்பித்து இருக்கிறது. இதன்பிறகு மேற்கு வங்க முதல்வர் மம்தா தனது தர்ணா போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

சாரதா நிறுவன நிதி மோசடி தொடர்பான ஆவணங்கள் ஆணையரிடம் இருப்பதாகவும், அதனை அவர் மின்னணுப் பதிவில் இருந்ததைக் கலைத்து விட்டார் என்றும் கூறுகிறார்கள். அந்த ஆவணத்தைக் கைப்பற்றவே சி.பி.ஐ. அதிகாரிகள் கொல்கத்தா காவல்துறை ஆணையர் ராஜீவ்குமார் வீட்டிற்கு இரவில் சென்று இருக்கின்றனர். விசாரணை என்ற பெயரால் அவரை கைது செய்தும் இருப்பார்கள். என்னதான் சி.பி.ஐ. சுயேச்சையான அதிகாரம் பெற்ற நிறுவனமாக இருந்தாலும் - அவர்களைப் போன்றே ஒரு மாநிலத்தின் காவல் துறை உயர் அதிகாரியை விசாரிக்கப் போகிறோம் என்கிற தகவலை முதல்வரிடம் தெரிவிக்க வேண்டாமா? அனுமதி பெற வேண்டாமா?

தமிழ்நாட்டில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் இருக்கிறபோதே “ரெய்டு' நடந்தது போலவே இந்நிகழ்வும் இருக்கிறதே. அனைத்து அதிகாரங்களும் மத்திய அரசிடம் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதனாலும் ஒரு மாநிலத்திற்குக் கொடுக்க வேண்டிய, தகவலை தந்து நடவடிக்கை மேற்கொள்ளும் சாதாரண நடைமுறையில்கூட மத்திய அரசின் அதிகார வர்க்கம் நடந்து கொள்ளாததை ஏற்க முடியாது. நாடாளுமன்றத் தேர்தல் சமீபத்துவிட்ட நிலையில், எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலத்தில் வேண்டுமென்றே பா.ஜ.க.வின் மத்திய அரசு ஒருகுழப்பத்தை, தவறான பிரச்சாரத்தை ஏற்படுத்தவே சி.பி.ஐ.யை ஏவி இந்த பிரச்சினையைக் கையில் எடுத்து இருக்கிறது. பா.ஜ.க. எப்போதும் ஆரோக்கியமான அரசியலை விரும்பாது.

கொல்கத்தாவில் மம்தா முன்னின்று மிக மாபெரும் பேரணியை - பொதுக் கூட்டத்தை பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களையெல்லாம் கூட்டி கடந்த ஜன.19ஆம் தேதி நடத்திக் காட்டினார். அதுகுறித்து நாம் ‘கொல்கத்தா காய்ச்சல்' எனும் தலையங்கத்தை எழுதி யிருந்தோம். இந்தப் பேரணியின் எழுச்சியைக் கண்டு பொறாத பா.ஜ.க. மம்தாவுக்கு எதிராக ஏதாவது செய்ய வேண்டுமே என்பதற்காக சி.பி.ஐ.யை ஏவி விட்டு பழி வாங்கும் நடவடிக்கையை மத்திய அரசு செய்துள்ளது.

- இந்தியா முழுமையும் பா.ஜ.க.வைக் காலூன்ற வைக்க என்னென்ன வித்தைகளை யெல்லாம் அக்கட்சி கையாளுகிறது என்பதை நினைக்கிற போது அவர்களின் அரசியலை எண்ணி நகைக்க வேண்டியிருக்கிறது. பா.ஜ.க.வினருக்கு நாணமே இல்லை. தமிழ்நாட்டில் ரஜினிக்கு வலைவீசினர். அஜீத்தை அசைத்துப் பார்த்தனர். இவை எதுவும் நடக்கவில்லை . அ.இ.அ.தி.மு.க அடிவருடிகள், ஊழலால் பயந்து ஒடுங்கி பா.ஜ.க.வோடு கூட்டணி அமைக்கும் அளவுக்கு வந்து இருக்கின்றனர்.

கேரளாவில் மோகன்லாலைப் பிடித்தனர். அவருக்கு “பத்ம ஸ்ரீ' வழங்கிப் பார்த்தனர். அவர் நழுவிக் கொண்டார். இவர்கள் இருக்கிற பக்கம் ஒரு பெரிய 'கும்பிடு போட்டு விட்டார். ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு அடிமையாவார் என்று நினைத்தனர் - முடிய வில்லை. அவரோ மம்தா தர்ணாவை முடிக்கிற தருணத்தில், அந்நிகழ்வில் பங்கேற்று கர்ச்சனை செய்துள்ளார். தெலுங்கானாவில் சட்டமன்றத் தேர்தலின் போது இவர்களை ராவ் ஒதுக்கி வைத்து விட்டார். கர்நாடகாவில் இந்தக் “காவிகள்' என்ன செய்கிறார்கள்? கூட்டணி உருவாகி நடந்து வருகிற மாநில அரசைப் 'பேரம் பேசி கவிழ்க்கப் பார்க்கிறார்கள். இவர்களால் முதல்வர் குமாரசாமி வெறுப்படைந்துப் பேசுகிறார். ஒரிசாவில் நவீன் பட்நாயக்கின் சகோதரிக்கு “பத்ம ஸ்ரீ கொடுத்து “தாஜா' செய்யப் பார்த்தனர். அவரோ ‘பத்ம ஸ்ரீ வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டார். மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றவுடன் பா.ஜ.க. வெறி கொண்டு அலைகிறது. அதுவும் நாடாளுமன்றத் தேர்தல் அவர்களுக்குப் பெரிய அச்சத்தை ஊட்டிக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில்தான் சி.பி.ஐ.யின் துணை கொண்டு மேற்கு வங்காளத்தில் புகுந்து பார்த்தார்கள்.

பா.ஜ.க. பாஸிஸ்ட் கட்சி. அதற்கு ஜனநாயகத்தின் மீது அக்கறை இல்லை . அரசியல் சட்டப்படி இயங்குகிற நிறுவனங்களின் மேல் நம்பிக்கை இல்லை. அதை மாற்றி அமைப்பதும், சீர்குலைப்பதும்தான் அவர்களின் வேலையாக இருந்து வருகிறது. உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம், சி. பி. ஐ., திட்டக்குழு, பொருளாதார ஆலோசகர்கள், ரிசர்வ் வங்கி கவர்னர்கள் என எல்லா சுயேச்சை நிறுவனங்களோடும், நிபுணர்களோடும் பா.ஜ.க.வினருக்கு சர்ச்சை . ஏன் அப்படி ஒரு நிலைமை உருவாகிறது என்றால், பா.ஜ.க.வினருக்கு அதிகாரம் செலுத்த வேண்டும். அதுவும் செருக்கோடு, நெற்றியை உயர்த்திப்புருவத்தை நெரித்து பார்க்க வேண்டும். அதில்தான் அவர்களுக்கு ஆசை; சுகமெல்லாம்! அந்த ஆசையை மீண்டும் நிறைவேற்றிக் கொள்ள மேற்கு வங்க “நெருப்பைத் தீண்டி பார்த்தார்கள். அதனால் மக்களவை நடைபெறவில்லை. மாநிலங்கள் அவையை ஒத்திவைத்தார்கள். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொதித்துப் போனார்கள். இந்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அப்போதும் என்ன சொல்கிறார்? மேற்கு வங்காளத்தில் அவர் அமைதியை ஏற்படுத்தி வைக்க முனையவில்லை. மாறாக மத்திய அரசுக்கு மாநிலங்களைவிட இன்னின்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்றார்.

கவர்னரை அறிக்கை கேட்டார். ஜாடையாக 356-ஐ பயன்படுத்தப் போவதில்லை என்றார். உச்சநீதிமன்ற உத்தரவால் தர்ணா முடிந்திருக்கிறது. ஆனால், பா.ஜ.க.வினர் - மத்திய அரசினர் சும்மா இருக்கப் போவதில்லை . மாபெரும் ' ரணகளத்தை' உருவாக்குவார்கள். அவர்களின் 'சரித்திரம்' அப்படி. இந்தியா முழுமையும் 'குஜராத்' கலவரத்தை ஏற்படுத்திக் காட்டினாலும் நாம் வியப்படைய மாட்டோம். பீகார் முதல்வர் நிதிஷ்குமார் அதிகாரத்திற்கு ஆசைப்பட்டு பா.ஜ.க.வினரை ஆதரித்தாலும் கொல்கத்தா தலையீடுகள் குறித்து ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அது இதுதான்; “தேர்தல் நெருங்கி வருகிற இந்த நேரத்தில் அடுத்த ஒரு மாதத்தில் நாட்டில் எதுவும் நடக்கும்.”

இதைத்தான் நாமும் சொல்கிறோம். முதல் கட்டமாக வெளிப்படையாக மம்தாவை மிரட்டிப் பார்த்திருக்கிறார்கள். பா.ஜ.க. அணையப் போகிற விளக்கு - பிரகாசமாய் எரிகிறது, என்ன செய்யலாம்!

இவ்வாறு முரசொலி தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
/body>