தேர்தல் வருது.. எதுவும் பேசக் கூடாது- ராமதாஸ் கையைக் கட்டிப் போட்ட அன்புமணி !

Anbumani orders to Dr Ramadoss on Alliance talks

by Mathivanan, Feb 7, 2019, 15:01 PM IST

ஒவ்வொரு ஆண்டும் நிழல் பட்ஜெட் போட்டு ஆளும்கட்சியை அதிர வைப்பதில் வல்லவர் பாமக நிறுவனர் ராமதாஸ். இந்த ஆண்டு அவர் போட்ட நிழல் பட்ஜெட்டை, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு கடுமையாகச் சாடினார்.

இதுதொடர்பாக நேற்று வன்னியரசு வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ' டிசம்பர் 9,2017 ஆம் ஆண்டு, மருத்துவர் அன்புமணி தனது அடிப்பொடிகளுடன் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்தார். 15 பக்கங்களை கொண்ட ஊழல் பட்டியல் ஒன்றை ஆளுநரிடம் அன்புமணி வழங்கினார். அதிமுக அமைச்சர்கள் 24 பேர் மீது ஊழல் குற்றச்சாட்டுள்ளதாக பகிரங்கமாக சொன்னார்.

மணல்,தாதுமணல், கிரானைட், மின்வாரியம், குட்கா, பள்ளிக்கல்வித்துறை, வாக்கிடாக்கி என அந்த ஊழல் பட்டியலில் இவ்வளவு ஊழல்களை கொடுத்துவிட்டு வெளியே வந்தார் அன்புமணி.

ஆனால், இப்போது ராமதாசு அதிமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக வழக்கம் போல மானங்கெட்டுப்போய் கூறுகிறார்.

அதிமுக அரசையும் தமது தலைவி ஜெயலலிதா குறித்து மிக மோசமாக வெறுப்பை கக்கிய ராமதாசுடன் கூட்டணி வைக்கத்தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் ஜெயக்குமார் திருவாய் மலர்ந்திருப்பது அவர்களது மானங்கெட்ட செயலாகத்தான் பார்க்க முடிகிறது' என விளாசியிருந்தார். நிழல் பட்ஜெட்டின் எதிரொலியாகத்தான் வன்னியரசு கொதிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

அதிமுகவுக்கு எதிராக ராமதாஸ் மௌனமாக இருப்பதைப் பற்றிப் பேசும் பாமக இளைஞரணி பிரமுகர் ஒருவர், ' தமிழ்நாடு அரசியல் களத்தில் மற்ற அரசியல் தலைவர்களை விடவும் ராமதாஸின் அறிக்கையில் அனல் வெளிப்படும். ஆனால், கடந்த சில வாரங்களாக அவரது கைகளைக் கட்டிப் போட்டுவிட்டார் அன்புமணி.

இதைப் பற்றி ராமதாஸிடம் பேசியவர், 'கூட்டணிப் பேச்சு முடியும் வரையில் யாரைப் பற்றியும் விமர்சித்து அறிக்கை வெளியிட வேண்டாம். ஆளும்கட்சியோடு சேர்ந்தால் தருமபுரியில் உறுதியாக வெற்றி பெறலாம். சேலத்திலும் நமது கூட்டணிக்கு வெற்றி கிடைக்கும். நீங்கள் தேவையில்லாமல் எதாவது பேசப் போய், யாருடைய பகையையும் சம்பாதித்துக் கொள்ள வேண்டாம்.

நமக்குக் காரியம் ஆவதுதான் முக்கியம்' எனக் கூறிவிட்டார். அதனால்தான் அறிக்கைகளில் காட்டத்தை வெளிக்காட்டாமல் தைலாபுரத் தோட்டத்தை வலம் வந்து கொண்டிருக்கிறார் மருத்துவர்' என்கிறார்.

You'r reading தேர்தல் வருது.. எதுவும் பேசக் கூடாது- ராமதாஸ் கையைக் கட்டிப் போட்ட அன்புமணி ! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை