லோக்சபா தேர்தலில் திமுகவின் கூட்டணி வியூகத்தில் சலசலப்பு அதிகரித்து வருகிறது. பாமகவை முதலிலேயே வளைக்காமல் விட்டுவிட்டோமோ என்கிற அதிர்ச்சியில் திமுக இருக்கிறது. அதேநேரத்தில் பாமக விவகாரத்தில் ஸ்டாலின் மருமகன் சபரீசனுக்கும், கனிமொழி எம்.பி.க்கும் இடையே மோதலும் வெடித்துள்ளதாம்.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் இடம்பெற்றதால் பாமகவின் பார்வை தினகரன், அதிமுக என திசைமாறியது. ஒருகட்டத்தில் பாமகவுக்காக திமுகவில் குரல்கள் ஒலித்த நிலையில் விடுதலை சிறுத்தைகளுக்கு கல்தா கொடுக்கப்படலாம் என்கிற சூழல் உருவானது.
ஆனால் பாமக, அதிமுகவுடன் கூட்டணி சேராமல் தனித்தே போட்டியிடும் என்றே திமுக தலைமை கணக்குப் போட்டது. இதற்கு எதிர்மாறாக அதிமுகவுடன் பாமக கூட்டணி உறுதியாகிவிட்டதால் ஆடிப் போய்கிடக்கிறதாம் திமுக தலைமை.
இதையடுத்து வன்னியர் தலைவர்கள் மூலமாக ராமதாஸுடன் பேச்சுவார்த்தையை திமுக மீண்டும் தொடங்கியிருக்கிறது. அன்புமணியுடன் ஸ்டாலின் மருமகன் சபரீசன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது.
இந்நிலையில் பாமகவை கூட்டணிக்கு கொண்டு வர கனிமொழியே முயற்சிப்பதாகவும் விடுதலை சிறுத்தைகளை கனிமொழிதான் கழற்றிவிட நினைக்கிறார் எனவும் திமுகவுக்குள் ஒரு தகவல் பரவியது. இதனால் கனிமொழி தரப்பு அதிர்ந்து போனதாம்.
தமக்கும் பாமகவுக்கும் எந்த தொடர்புமே இல்லாத நிலையில் இந்த விவகாரத்தில் தம்மை ஏன் இழுத்து விடுகிறார்கள்.. நிச்சயம் இது சபரீசன் தரப்பு வேலையாகத்தான் இருக்கும்... தூத்துக்குடியில் ஊராட்சி சபை கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது அங்கே உதயநிதி மூலம் குடைச்சல் கொடுத்தனர். இப்போது இப்படி.. என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்களோ? என கடுப்பாகிவிட்டாராம் கனிமொழி.
-எழில் பிரதீபன்