கொள்கை – கோட்பாடுகள் அற்ற தைலாபுரம் வாய்ச்சவடால் வியாபாரி.. ராமதாஸ் மீது முரசொலி கடும் தாக்கு

AIADMK acquired leased property in crores

by Mathivanan, Feb 22, 2019, 12:07 PM IST

'தேக்கு மரம் வையுங்கள். பத்து, பதினைந்து ஆண்டுகளில் நீங்கள் கோடீஸ்வரர்' என்று ஒருவர் விளம்பரம் கொடுத்தார், இருபது ஆண்டுகளுக்கு முன்னால். எல்லோரும் ஆயிரக்கணக்கில், லட்சக் கணக்கில் பணம் கொடுத்து தேக்கு கன்றுக்கு பெயர் கொடுத்தார்கள். விளம்பரம் கொடுத்தவர் கோடீஸ்வரர் ஆகி கோடிகளில் புரண்டாரே தவிர, ஏமாந்தவர்கள் மக்கள்தான்.

தைலாபுரம் தைல வியாபாரி டாக்டர் ராமதாஸ்க்கு வாய்ச் சவடால் அடிக்க சொல்லியா தரவேண்டும்! 'நான் கொள்கையில் தேக்காக இருந்தாலும் கூட்டணிக்காக நாணலாக இருப்பேன்' என்று, அ.தி.மு.க - பா.ஜ.க. வுடன் அணி சேர்ந்ததற்காக விளக்கம் அளித்துள்ளார்.

தேக்கு மரத்தில் முதலீடு செய்யுங்கள் என்று ஏய்த்தவருக்கும், இந்த தைலாபுரம் தேக்கு வியாபாரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

அழியாத வாசகம் ஒன்றைச் சொல்லிவிட்டு மறைந்து போயிருக் கிறார்; தி.மு.க.வின் வெல்லும் சொற்பொழிவாளர்களில் ஒருவரான வெற்றி கொண்டான். வீட்டைகுத்தகைக்கு விட்டுச் சம்பாதிப்பவர்களைப் பார்த்திருப்போம். நிலத்தை குத்தகைக்கு விட்டுச் சம்பாதிப்பவர்களைப் பார்த்திருப்போம். கட்சியைக் குத்தகைக்கு விட்டுச் சம்பாதிப்பது ராமதாஸ் மட்டும்தான்' என்றார் வெ.கொ. எவ்வளவு தீர்க்க தரிசனம் அந்த ஜெ.கொ.வுக்கு! (ஜெயங்கொண்டம் அவரது ஊர்)

இந்த குத்தகைத் தனத்தை மறைப்பதற்கு பத்து கோரிக்கைகள் என்கிறார் இராமதாஸ்.

காவிரி பாசனப் பகுதியை ஹைட்ரோ கார்பன், மீத்தேன் என சிதைக்கும் கூட்டத்திடம் - மேகதாது அணையை தடுக்கத் துப்பு இல்லாத கூட்டத்திடம் - ஊழல் மட்டுமே பிரதானமான கூட்டத்திடம் - 7 தமிழர் விடுதலைக்கு தீர்மானம் போட்டதோடு கடமை முடிந்ததாக தூங்கும் கூட்டத்திடம் - மதுக்கடை விற்பனைக்கு இலக்கு வைக்கும் கூட்டத்திடம் - மணல் மாஃபியா சேகர் ரெட்டியின் திருட்டுக் கூட்டத்திடம் - அரசு ஊழியர்களை வேட்டையாடிய கூட்டத்திடம் - விவசாயக் கடன்களை ரத்து செய்ய மறுத்த இரக்கமற்ற கூட்டத்திடம் - நீட் விலக்கு தீர்மானம் போட்டுவிட்டு 'மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்திடம் - இது தொடர்பான பத்துக் கோரிக்கைகளை வைத்ததாகவும், இந்த கோரிக்கைகளை அ.தி.மு.க.வும் ஆதரிக்கிறது என்றும், அதனால்தான் கூட்டணி சேர்ந்ததாகவும் தைலாபுரம் சொல்கிறது. இந்த பத்து கோரிக்கைகளுக்கும் துரோகம் செய்வதையே தொழிலாகக் கொண்ட 'சேலத்து சேக்கிழார் எடப்பாடி பழனிசாமி சிரிக்கிறார். 'பன்றிகளுக்கு முன்னால் முத்துக்களைச் சிதறவிடாதீர்கள் என்பது உலக மொழிகளுள் ஒன்று. இராமதாஸ் செய்திருப்பது அதுதான்.

இராமதாஸைப் பொறுத்தவரை, முத்துக்களைச் சிதற விடுபவர் அல்ல; பறிப்பவர். எல்லாச் சொல்லுக்கும் ஒவ்வொரு விலை உண்டு என்பது அவருக்குத் தெரியும். 'அநியாய விலை உண்டு' என்பதையும் அனைவரும் அறிவார்கள்.
குளிர் காலத்தில் சுக்கு காபி விற்பதும், கோடையில் ஐஸ் சர்பத்துக்கு மாறுவதும் அவருக்கு கைவந்த கலை. அதற்கு எதற்கு தத்துவார்த்த தகரப்பூச்சு? 'மக்கள் நலக் கூட்டணி' என்கிறார் அவர். 'தம் மக்கள் நலக் கூட்டணி' என்பது உண்மைதான். 'இது பண நலக் கூட்டணி' என்று மிகச் சரியாகப் பெயர் சூட்டி இருக்கிறார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.

"கார் உள்ளளவும், பார் உள்ளளவும்... 'பார்ன்னா குடிக்கிற 'பார்' இல்லை ... 'பார்ன்னா உலகம்..... உலகம் உள்ளவரை, திராவிடக் கட்சி களோடு கூட்டணி இல்லை. இதை பத்திரத்தில் வேண்டுமானாலும் எழுதித் தருகிறேன்” என்றார் இந்த நாக்குச் சித்தர். பத்திரங்கள் பத்திரமாக இருக்கின்றன.

"நானோ, என் குடும்பத்தினரோ சட்டமன்ற, நாடாளுமன்றத்துக்குச் செல்லமாட்டோம். படியை மிதிக்க மாட்டோம்” என்று ஐந்து சத்தியம் செய்தவர் இந்த நாக்குச் சித்தர். அவர் தொங்க விட்ட சாட்டை இன்னமும் இருக்கிறது.

குத்தகைக்கு விட்டுப் பிழைப்பவருக்கு எதற்கு கொள்கைக் கோட் பாடுகள்? எப்போதோ உலுத்துப் போய்விட்ட ஊழல் தேக்கு. 'மக்கியே பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அரசியலின் தொடக்கமே முதல் கோணல், முற்றிலும் கோணல். பிறகு ஏன் நாணல் உதாரணம்? கோணல்தானே குணமே!

கொள்கையில் தேக்காக இருப்பவர், கூட்டணியிலும் தேக்காகத்தான் இருக்க முடியும். நாணலாக இருக்க முடியாது. இரண்டின் குணமும் வேறு வேறு. ஆனால் எடப்பாடி பழனிசாமி - டாக்டர் இராமதாஸ் இருவரின் குணமும் ஒன்று என்பதால் ஒன்று சேர்ந்து விட்டார்கள். எடப்பாடியுடன் கூட்டுச் சேர்ந்த ராமதாஸ் சொல்கிறார், "கொள்கையில் சமரசம் கிடையாது' என்று!

எடப்பாடி சொல்லிச் சிரித்திருப்பார், 'எனக்குத்தான் கொள்கையே கிடையாதே!' என்று!

இந்த நாடு ஏற்கனவே பார்த்த பழைய நாடகக் கொட்டகையின் கிழிந்த சேலைகள்தான் இவை. 'அண்ணாமலை' பட வசனமே நினைவுக்கு வந்து அதிர்ச்சியூட்டுகிறது. 'இந்த பழைய பில்டிங்கை
இத்தனை கோடி கொடுத்தா வாங்குவார்கள்?'

You'r reading கொள்கை – கோட்பாடுகள் அற்ற தைலாபுரம் வாய்ச்சவடால் வியாபாரி.. ராமதாஸ் மீது முரசொலி கடும் தாக்கு Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை