மார்ச்-6, நிறைஞ்ச அமாவாசை..!பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு!

Loksabha election, PM modi participates admk alliance campaign in Chennai

by Nagaraj, Mar 2, 2019, 14:53 PM IST

வரும் 6-ந் தேதி நிறை அமாவாசை நாளில் சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரச்சார பொதுக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள், யாருக்கு எந்தத் தொகுதி என்ற அறிவிப்பை வெளியிட முடிவு செய்யப்பட்டு, கூட்டணி பேச்சுவார்த்தை விறுவிறுப்படைந்துள்ளது.

தேமுதிகவின் இழுபறியால் அதிமுக, திமுக கூட்டணியில் தேக்கமடைந்திருந்த கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் சூடு பிடித்துள்ளது. அதிமுக பக்கம் தேமுதிக செல்வது உறுதியாகிவிட்டதால் எந்தக் கூட்டணியில் எந்தெந்தக் கட்சிகள் இடம் பெறப் போகிறது என்பது தெளிவாகி வருகிறது.

அதிமுக கூட்டணியில் பாஜக (5), பாமக (7), புதிய தமிழகம் (1) கட்சிகளுக்கு தொகுதி எண்ணிக்கை முடிவு செய்யப்பட்டு விட்டது. ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரசுடன் பேச்சு நடந்து வருவதாகவும் அவருக்கு மயிலாடுதுறை தொகுதி ஒதுக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது. தேமுதிகவுக்கும் 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டால், எஞ்சிய 21 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் எனத் தெரிகிறது. ஏ.சி.சண்முகம், சரத்குமார், பாரிவேந்தர் போன்றவர்களை அதிமுக கழட்டி விட்டு விட்டது.

இதே போன்று திமுக கூட்டணியில் காங்கிரஸ் (10), கொங்கு கட்சி (1), முஸ்லீம் லீக் (1) ஆகிய கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முடிந்து விட்டது.இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தருக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டாலும் அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவார் என்று தெரிகிறது. மதிமுக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளும் திமுக கூட்டணியில் இடம் பெறுவது உறுதியானாலும் தொகுதிப் பங்கீடு இழுபறியாக உள்ளது. இக்கட்சிகளுக்கு தலா ஒன்றா? இரண்டா? என்பது தான் கேள்விக்குறியாக உள்ளது.

இந்நிலையில் வரும் 6-ந் தேதி நிறை அமாவாசை நாளில், சென்னை வண்டலூரில் பிரதமர் மோடி பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். இதில் அதிமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரையும் பங்கேற்க செய்து எந்தக் கட்சிக்கு எந்தத் தொகுதி என்ற அறிவிப்பு வெளியிட அதிமுக முனைப்பு காட்டி வருகிறது.

மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தை பிரம்மாண்டமாக நடத்துவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அதிமுக முக்கிய அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் இன்று முக்கிய ஆலோசனையும் நடத்தினார்.

You'r reading மார்ச்-6, நிறைஞ்ச அமாவாசை..!பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் அதிமுக கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை