அதிமுக, தேமுதிக கூட்டணிப் பேச்சு முடிவுக்கு வந்ததில் பிரேமலதாவும் சுதீஷும் மட்டும் உற்சாகத்தில் இருக்கிறார்கள். மாவட்ட செயலாளர்கள் மற்றும் கிளைக்கழக நிர்வாகிகள் மத்தியில் பெரிதாக எந்த ஆர்வமும் இல்லை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்குக் காரணமாக சில விஷயங்களையும் அவர்கள் பட்டியிடுகிறார்கள்.
2011 தேர்தலில் திமுகவைப் படுதோல்வி அடையச் செய்வதற்காக தேமுதிகவைக் கூட்டணிக்குள் சேர்த்துக் கொண்டார் ஜெயலலிதா. இந்தக் கெமிஸ்ட்ரியால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தும் விஜயகாந்த்துக்குக் கிடைத்தது.
ஆனால் இந்த உற்சாகம் சில மாதங்கள்கூட நீடிக்கவில்லை. சட்டமன்றத்தில் நாக்கைத் துருத்திக் கொள்ளும் அளவுக்கு அதிமுகவும் தேமுதிகவும் சண்டையிட்டுக் கொண்டன. இதன் காரணமாக, தேமுதிக எம்எல்ஏக்கள் பலரும் சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளானார்கள்.
இதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரையில் தேமுதிக போராடியது. அந்தக் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் எனப் பலரும் அடக்குமுறைகளுக்கு ஆளானார்கள்.
2016 சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிப்புக்கு சில வாரங்கள் முன்னதாக விஜயகாந்தின் எதிர்க்கட்சித் தலைவர் என்ற அந்தஸ்தையும் பறித்தார் ஜெயலலிதா. எண்ணற்ற வழக்குகள், போலீஸ் டார்ச்சர் என ஜெயலலிதா செய்த கொடுமைகளை தேமுதிகவினர் இன்னும் மறக்கவில்லை.
அப்படியிருக்கும்போது, பழைய பகையை மறந்துவிட்டு எடப்பாடியோடு கைகுலுக்கிக் கொண்டிருப்பதில் எந்தவித நியாயமும் இல்லை என்ற பொருமல்கள் கேட்கத் தொடங்கியிருக்கின்றன. விஜயகாந்த் நல்ல நிலையில் இருந்திருந்தால் நிச்சயமாக திமுக கூட்டணியைத்தான் தேர்வு செய்திருப்பார் எனவும் விவாதம் செய்து வருகின்றனர்.
எழில் பிரதீபன்