இந்திய ஜனநாயகக் கட்சிக்குத் திமுக கூட்டணியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டள்ளது. இந்தத் தேர்தலில் பாமக போட்டியிடப் போகும் 7 தொகுதிகளில், அவர்களது வெற்றியைக் கலைக்க வேண்டியது உங்கள் பொறுப்பு என பாரிவேந்தரிடம் கூறியிருக்கிறார் ஸ்டாலின்.
மக்களவைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட இருக்கிறார் ஐஜேகே நிறுவனத் தலைவர் பாரிவேந்தர். அதிமுக கூட்டணியில் பாமக இருந்ததால், திமுக அணியை அவர் தேர்வு செய்தார்.
மருத்துவக் கல்லூரி முறைகேடு வழக்கில் பாரிவேந்தருக்கு எதிராக ராமதாஸ் வெளியிட்ட அறிக்கைகள்தான், ஐஜேகே அணி மாறுவதற்குப் பிரதான காரணமாக இருந்தது. இந்த நிலையில், பாமக போட்டியிடும் வடக்கு மண்டல தொகுதிகளில் தேர்தல் வேலைகளைத் துரிதப்படுத்தியிருக்கிறது திமுக.
இதைப் பற்றி பாரிவேந்தர் தரப்பினரிடம் பேசிய திமுக நிர்வாகிகள், நீங்கள் போட்டியிடப் போகும் ஒரு தொகுதியில் வெற்றி பெறுவது ஒருபக்கம் இருந்தாலும் பாமக போட்டியிடப் போகும் 7 தொகுதிகளில் அவர்களை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டும். இதற்கான வேலைகளையும் தொடங்குங்கள் எனக் கூறியுள்ளனர்.
இதற்குப் பதில் கொடுத்த பாரிவேந்தர் தரப்பினர், இந்தமுறை வன்னிய சமூக வாக்குகளே அவர்களுக்குப் போகாது. அந்த பயத்தில்தான் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளனர். எங்களுடைய கல்வி நிறுவனத்தில் படித்த வன்னிய சமூக இளைஞர்கள் பெரும்பாலானோர், பாமகவுக்கு எதிராகத் தேர்தல் வேலை பார்ப்பார்கள்.
பாமகவுக்கு எதிரான மற்ற சாதிகளின் வாக்குகளும் நம்முடைய கூட்டணிக்கே வந்து சேரும் என நம்பிக்கையோடு பேசியுள்ளனர். இந்தத் தகவலால் உற்சாகத்தில் இருக்கிறார் திமுக தலைவர் ஸ்டாலின்.