பொள்ளாச்சி பாலியல் கொடூரத்திற்கு எதிராக கல்லூரி மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுவதும் வெடித்துள்ள நிலையில், எங்கள் பாதுகாப்புக்கு துப்பாக்கி வைத்துக் கொள்ள லைசென்ஸ் கொடுங்கள் என்று கோவை மாவட்ட கலெக்டரிடம் கல்லூரி மாணவியும் 10-ம் வகுப்பு படிக்கும் அவருடைய சகோதரியும் மனு கொடுத்து அதிர்ச்சியளித்தனர்.
பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது. 5 ஆண்டுகளுக்கும் மேலாக பள்ளி, கல்லூரி மாணவிகள் மற்றும் இளம் பெண்கள் பலரை சீரழித்த கும்பலில் ஆளும் கட்சி முக்கியப் புள்ளிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி பரபரத்து கிடக்கிறது. இந்தக் கொடூர செயலில் ஈடுபட்ட காமுக அரக்கர்களை காப்பாற்ற அரசுத் தரப்பு முனைப்பு காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்து தமிழகம் முழுவதும் கடந்த 5 நாட்களாக கல்லூரி மாணவ, மாணவிகள் வீதிக்கு வந்து போராடுகின்றனர்.
இதனால் கோவை மாவட்டத்தில் உள்ள பல கல்லுரிகளுக்கும் காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப் பட்டு, விடுதிகளில் தங்கியுள்ள மாணவர்களும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர். ஆனாலும் மாணவர்கள் போராட்டம் இன்றும் பல இடங்களில் தொடர்ந்தது.கோவை ஆட்சியர் அலுவலகம் முன் மாணவர்கள் இன்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது கோவை நல்லாம் பாளையத்தைச் சேர்ந்த தமிழீழம் என்ற கல்லூரி மாணவி 10-ம் வகுப்பு படிக்கும் தனது சகோதரி ஓவியாவுடன் கோவை மாவட்ட ஆட்சியர் ராசா மணியிடம் மனு கொடுத்தனர். பாலியல் வன்முறைகளில் இருந்து எங்களை தற்காத்துக் கொள்ள துப்பாக்கி லைசென்ஸ் வேண்டும் என்று கூறி மனு கொடுத்து அதிர்ச்சி கொடுத்தனர்.