முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு பேசினார். அதில், சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டல் விடுத்தார். மிரட்டலை அடுத்து உடனடியாக முதல்வர் இல்லம் விரைந்த அதிகாரிகள் அங்கு சோதனை மேற்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் இந்த சோதனை நடந்தது. ஆனால் இந்த சோதனையில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த மிரட்டல் வெறும் புரளி என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து போலீசார் முதல்வரின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார் என விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், பள்ளிகரணை போலீசார் சுந்தராஜ் என்பவரை கைது செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இப்படியான மிரட்டல் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைவர்களுக்கு பாதுகாப்புகளை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.