``ஐஐடி மாணவர் மோடிக்கு விருப்பமான மனிதர்” - மனோகர் பாரிக்கர் வரலாறு

Goa CM Manohar Parrikar, the man who won many battles, succumbs to illness

by Sasitharan, Mar 18, 2019, 11:40 AM IST

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் காலமானார்.

இவரின் இயற்பெயர் மனோகர் கோபாலக்கிருஷ்ண பிரபு பாரிக்கர். இவர் டிசம்பர் 13, 1955 அன்று கோவா மாநிலத்தின் மபுசாவில் பிறந்தார் . மார்கோவாவில் உள்ள லயோலா உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். மராத்தியில் தனது இடைநிலை கல்வியை நிறைவு செய்தவர் 1978ல் பம்பாயிலுள்ள ஐஐடியில் உலோகவியலில் பொறியியல் படித்தார். இந்திய வரலாற்றிலேயே 'ஐஐடி'யில் படித்த முதல் மாநில முதல்வர் என்ற சிறப்பை பெற்றவர் இவர் தான். இவருடைய மனைவியின் பெயர் மேதா பாரிக்கர். இவருக்கு இரண்டு குழந்தைகள். இவர் 2017 மார்ச் 14 தேதி முதல் கோவா மாநில முதல்வராகப் பதவி வகித்து வந்தார். ஏற்கனவே 2000 ஆண்டு முதல் 2005 வரையிலும் பின்னர் 2012 முதல் 2014 வரை கோவா மாநில முதலமைச்சராக இருந்தார்.

பாரதீய ஜனதா கட்சியின் உறுப்பினரான பாரிக்கர் அக்கட்சியின் முதல் கோவா முதல்வர் ஆவார். பாரிக்கர் முதலில் 1994 ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத்தில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜூன் 1999 முதல் நவம்பர் 1999 வரை எதிர்க்கட்சி தலைவராக பதவி வகித்த பாரிக்கர் அடுத்த வருடமே முதல் முறையாக கோவாவின் முதல்வர் ஆனார். ஆனால் அவரது பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. இருப்பினும் அந்த வருடமே அவர் மீண்டும் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2005ல், நான்கு பா.ஜ.க உறுப்பினர்கள் பதவி விலகியதன் காரணமாக இவரது அரசாங்கம் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்தது. எனினும் அடுத்த மாதமே பெரும்பான்மையை நிரூபித்தார். 2007 ஆம் ஆண்டில், பாரிக்கர் தலைமையிலான பா.ஜ.க அரசை,' திகம்பர் காமத்' தலைமையிலான இந்திய தேசிய காங்கிரஸ் கோவா மாநில தேர்தலில் தோற்கடித்தது. மீண்டும் பா.ஜ.க மார்ச் 2012 ல் நடைபெற்ற கோவா சட்டசபை தேர்தலில் 24 இடங்களை வென்று மீண்டும் வெற்றி பெற்றது.

2014 ஆம் ஆண்டின் இந்தியப் பொதுத் தேர்தலில் கோவாவின் இரு மக்களவைத் தொகுதிகளிலும் பாரதிய ஜனதா கட்சி வெற்றிபெற்றது. தேர்தல் நடைபெறுவதுக்கு முன்னதாகவே மோடியை பிரதமர் வேட்பாளராக முதல் ஆளாக முன்மொழிந்தார். இதனால் மோடியின் விருப்பத்துக்கு உள்ளானார். அதன்பயனாக பாரிக்கர், உத்திரப் பிரதேசத்திலிருந்து ராஜ்ய சபை உறுப்பினராக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டு, மோடியின் அமைச்சரவையின் முதல் விரிவாக்கத்தின் போது பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றார். மார்ச் 2017-இல் மீண்டும் கோவா மாநில முதலமைச்சராக பதவி ஏற்றார்.

63 வயதான இவர் ,கடந்த அக்டோபர் மாதம் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்னர் அமெரிக்கா சென்று அறுவை சிகிச்சை பெற்ற அவர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், மனோகர் பாரிக்கரின் உடல்நிலை நேற்று மோசமடைந்தது. இதனால் பா.ஜ.க மூத்த தலைவர்கள் கோவா விரைந்தனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணியளவில் மனோகர் பாரிக்கர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.

மனோகர் பாரிக்கரின் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

You'r reading ``ஐஐடி மாணவர் மோடிக்கு விருப்பமான மனிதர்” - மனோகர் பாரிக்கர் வரலாறு Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை