மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நாடுமுழுவதும் நடைபெற இருக்கிறது. தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன், காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதி தேர்தல் ஏப்ரல் 18ம் தேதி நடக்கிறது.
தமிழகத்தின் பிரதான கட்சிகளான திமுக, அதிமுக கூட்டணிகளை வலுவாக அமைத்துள்ளது. தேர்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள பாஜகவுக்கு 5 தொகுதிகள் (தூத்துக்குடி, கோவை, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி) ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக, தேமுதிக, பாமக எனக் கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட நிலையில், பாஜக வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை. நாளை பட்டியல் வெளியிட வாய்ப்பு உள்ளதாகத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன்சாமி, பாஜகவுக்கு ஆதரவாகத் தமிழகத்தில் வாக்கு சேகரிக்கப் போவதில்லை எனக் கூறியுள்ளார். தேர்தலில், பாஜக தனித்துப் போட்டியிடாததால் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.