சிவகங்கை தொகுதிக்குக் காங்கிரஸ் வேட்பாளரை அறிவிப்பதில் நீடித்து வந்த இழுபறி இன்று முடிவுக்கு வந்தது. அங்கு முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என அக்கட்சியின் அகில இந்திய தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனால் பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜாவை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார்.
முன்னதாக சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் ரேஸில் கார்த்தி சிதம்பரம், சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் தலைவர் புஷ்பராஜின் மகனான டாக்டர் அருண் ஆகியோரின் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட்டது. இவர்களுக்கிடையில் கடும் போட்டி நிலவியது. இதில் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்படுவதற்கு முதலில் இருந்தே தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சுதர்சன நாச்சியப்பன் முட்டுக்கட்டை போட்டுவருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. அதையும் மீறி இன்று கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்தநிலையில் இந்த அறிவிப்புக்கு சுதர்சன நாச்சியப்பன் தற்போது வெளிப்படையாகவே எதிர்ப்பு தெரிவித்து உள்ளார். அதில், ``சிவகங்கை காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரத்தை அறிவித்துள்ளது மக்களுக்கே அதிர்ச்சி அளிக்கிறது. சிதம்பரம் என் வளர்ச்சியை தடுத்தவர். அதுமட்டுமில்லாமல், தொகுதிக்கு எந்த நன்மையும் செய்யாமல் வெளிநாடுகளில் சொத்துகளை சேர்த்துள்ளது ப.சிதம்பரத்தின் குடும்பம்; ப.சிதம்பரத்தின் குடும்பத்தை மக்கள் வெறுக்கிறார்கள்" என வெளிப்படையாகவே குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுக்கு முதல் ஆளாக சுதர்சன நாச்சியப்பன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது அக்கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.