நடிகர் உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகரும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் அக்கட்சிக்கு ஆதரவாக தொடர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்திற்கு செல்லுமிடமெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது, கதை சொல்வது, எதிர்க் கூட்டணிக்கு சவால் விடுவது என கலக்கி வருகிறார். அதேபோல் அதிமுக, பாஜக கூட்டணி குறித்தும் காரசாரமான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார். இதனால் அவரது பிரச்சாரம் மக்கள் மத்தியில் வெகுவாக எடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி கள்ளக்குறிச்சி நான்கு முனை சந்திப்பில் தி.மு.க. வேட்பாளராகிய பொன்முடி மகன் கௌதம் சிகாமணியை ஆதரித்து உதயநிதி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது சுமார் நான்கு மணி நேரம் இதன் காரணமாக அங்கு போக்குவரத்து நெரிசலும் அதனால் பொதுமக்களுக்கு இடையூறும் ஏற்பட்டதாக புகார் எழுந்த நிலையில் தேர்தல் விதிகளை மீறியதாக உதயநிதி ஸ்டாலின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரி முகிலன் கொடுத்த புகாரின் படி உதயநிதி ஸ்டாலின் மீது 143, 341,188 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.