தமிழகத்திற்கு தேர்தல் பார்வையாளராக வந்த அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரி போதை மயக்கத்தில் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்ட சம்பவம் அரியலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த அதிகாரியை உடனடியாக பணியில் இருந்து விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ஹேமந்த் கல்சன் என்பவரை, தமிழகத்தின் அரியலூர் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பாதுகாப்பு பணிகளை கவனிக்கும் தேர்தல் பார்வையாளராக நியமித்தது தேர்தல் ஆணையம் .
கடந்த 28-ந் தேதி அரியலூர் வந்த ஹேமன்த், அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். இன்று அதிகாலை அறையிலிருந்து வெளியே வந்த ஹேமன்த், தன் பாதுகாவலரின் துப்பாக்கியால் வானை நோக்கி 9 முறை சரமாரியாக சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. மது போதை தலைக்கேறியதால் துப்பாக்கியால் சுட்டு விளையாட்டு காட்டியுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்தது.
ஹேமன்த் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பற்றி தகவல் அறிந்த அரியலூர் கலெக்டர் விஜயலட்சுமி, எஸ்.பி.நடராஜன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். பின்னர் நடந்த சம்பவம் பற்றி தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கும் அறிக்கை கொடுத்தனர்.
அதன்படி, போதையில் துப்பாக்கியால் சுட்டு பரபரப்பை ஏற்படுத்திய அரியானா மாநில ஐபிஎஸ் அதிகாரியை, தேர்தல் பார்வையாளர் பொறுப்பிலிருந்து உடனடியாக விடுவித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.