காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் போட்டியிடுவார் என முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
உ.பி.மாநிலம் அமேதி தொகுதி தான் ராகுல் காந்தியின் சொந்தத் தொகுதி. இந்தத் தொகுதியில் 2009,2014 தேர்தல்களில் தொடர்ந்து போட்டியிட்டு ராகுல் வெற்றி பெற்றதுடன் இந்த முறையும் அங்கே போட்டியிடுவார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க ராகுல் தென் மாநிலத்தில் ஒரு தொகுதியில் போட்டியிடுவார் எனக் கூறப்பட்டு வந்தது. இதனை இன்று அக்கட்சி உறுதி செய்துள்ளது. மேலும் வயநாடு காங்கிரஸுக்கு ஆஸ்தான தொகுதி என்பதால் பாதுகாப்பானதாக இருக்கும் எனக் கருதி இதை தேர்வு செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. ஆனால் ராகுலின் போட்டியை பாஜகவை விட கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்த்துள்ளது.
இது தொடர்பாக பேசிய கேரள முதல்வர் பினராயி விஜயன், ``ராகுல் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஆச்சரியம் இல்லை. பாஜகவை ஏன் எதிர்த்து போட்டியிடவில்லை. தனது பலத்தை நிரூபிக்க பாஜக போட்டியிடும் தொகுதியில் ராகுல் எதிர்த்து போட்டியிட வேண்டும். இடதுசாரி முன்னணியை எதிர்த்து ராகுல் போட்டியிடுவதால் காங்கிரஸுக்கு கடும் போட்டியாக இருப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.
இதேபோல் மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், ``யாரும் எங்கிருந்தும் போட்டியிடலாம், ஆனால் வயநாடு தொகுதியில் போட்டியிடுவது ஏன் என்று மக்களுக்கு ராகுல் காந்தி தெரிவிக்க வேண்டும். வயநாட்டில் இடதுசாரிக்கு எதிராக போட்டியிடுவதன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்?" எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.