சுற்றுச்சூழல் போராளியான முகிலன் ஸ்டெர்லைட் போராட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்தவர்கள் குடும்பத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுக்கு காரணம் சில காவல்துறை உயரதிகாரிகள்தான் என்றும், காவல்துறை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் அடியாட்கள் உதவியுடன்தான் துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அரங்கேற்றியதாகவும், அதற்கான வீடியோவையும் ஆவணங்களையும் அண்மையில் சென்னையில் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார். இந்த நிகழ்வு முடிந்து ஊருக்குத் திரும்புவதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் திடீரென காணாமல் போனார். இதுதொடர்பாக வழக்கும், போராட்டமும் நடந்து வருகிறது. ஐநா வரை அவர் காணாமல் போனது தொடர்பாக விவகாரம் எதிரொலித்தது.
இந்தநிலையில் இந்த விவகாரத்தில் புதிய திருப்பமாக முகிலன் மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளார் கரூர் பெண் ஒருவர். கரூர் மாவட்டம், குளித்தலை தாலுகா, குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராஜேஸ்வரி என்ற பெண் ஒருவர் பாலியல் பலாத்கார புகார் கொடுத்ததன்பேரில் அவர்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், ``தான் முகிலனுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டேன். கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27-ம் தேதி நெடுவாசல் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தங்கும் விடுதியில் தன்னை முகிலன் பலவந்தப்படுத்தி கற்பழித்தார். தான் மறுத்தபோது திருமணம் செய்துக்கொள்வதாக கூறி நம்ப வைத்து பல முறை உறவு கொண்டார்" எனக் குறிப்பிட்டார். இந்தப் புகாரை அடுத்து குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைத்தில் ஐபிசி பிரிவு 417 (ஏமாற்றுதல்), 376 (பாலியல் பலாத்காரம்) மற்றும் 4(H) பெண் வன்கொடுமை சட்டத்தின்கீழ் முகிலன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, ராஜேஸ்வரி ஏமாற்றுகிறார் என்று ஒருசாரார் குற்றச்சாட்டு எழுப்ப இதற்கு பேஸ்புக் பக்கத்தில் பதிலளித்த அவர், ``முகிலன் என்னை தவறாக பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றிவிட்டார். மகள் என்று பலரிடம் என்னை சொன்னார். ஆனால், மகளுக்கும், மனைவிக்குமான உறவின் வித்தியாசம் முகிலனுக்குத் தெரியாதா?" எனக் கூறியுள்ளார். முகிலன் காணாமல்போன நிலையில் அவரை சிபிசிஐடி போலீஸார் தேடி வரும் நிலையில், அவர் மீது பெண் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார் என வதந்திகள் இருந்த சூழ்நிலையில் தற்போது அந்தப்பெண்ணே புகார் அளித்து வழக்கும் பதிவு செய்யப்பட்டிருப்பது சூழலியல் ஆர்வலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.