தேர்தலுக்கு பின் அதிமுகவுடன் அமமுக இணைய பேச்சுவார்த்தை நடக்கிறது என மதுரை ஆதீனம் கூறியுள்ளதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், தொடர்ந்து பொய் பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுகவும் அமமுகவும் இணைய வேண்டும். மத்தியில் மீண்டும் மோடி பிரதமராக வேண்டும் என மதுரை ஆதீனம் விருப்பம் தெரிவித்திருந்தார்.மதுரை ஆதீனத்திற்கு டிடிவி தினகரன் உடனடியாக மறுப்பு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றும் மதுரை ஆதீனம் ஒரு சர்ச்சைக்குரிய தகவலைக் கூறி டிடிவி தினகரனிடம் ஏகத்துக்கும் குட்டு வாங்கியுள்ளார். அதிமுகவுடன் அமமுகவை இணைப்பது குறித்து ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. தேர்தலுக்குப் பின் இணைப்பு சாத்தியம் என்று மதுரை ஆதீனம் கூறியிருந்தார்.
மதுரை ஆதீனத்தின் இந்தக் கருத்து டிடிவி தினகரனை கோபமடையச் செய்துள்ளது. மதுரை ஆதீனம் ஆதாரமில்லாத, சாத்தியமில்லாத பொய்த் தகவல்களை பரப்புவதை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். யாருக்காகவே பத்திரிகை பிஆர்ஓ வேலை பார்க்கிறார். அதிமுகவுடன் அமமுக இணைப்பு என்பது ஒரு போதும் நடக்கப் போவதில்லை. அப்படி இணைப்பு பேச்சு நடப்பதாகக் கூறும் ஆதீனம் அதற்கான ஆதாரங்களை வெளியிட வேண்டும். இனியும் இது போன்று ஆதாரமில்லாமல் பொய்யை பரப்பினால் சட்ட ரீதியிலான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.