மக்களவைத் தேர்தல் 2019 நெருங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில் தமிழகம் முழுவதும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
மார்ச் 20-ம் தேதி சேலத்தில் இருந்து தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கிருந்து கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர் என புறப்பட்டு தமிழகம் முழுதும் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். ஒவ்வொரு
நாள் பிரசாரத்தையும் வெற்றிகரமாக முடிக்கும் எடப்பாடி பழனிசாமி, இரவு நேரங்களில், 18 சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர்களோடும், சேலம் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர்களோடும் மட்டும் தான் ஆலோசனையில் ஈடுபடுகிறாராம். மேலும், இவர்களைத் தவிர உளவுத் துறையினரோடும் ஆலோசனை நடத்துகிறார்.
முக்கிய போட்டி:
ஒவ்வொரு நாளும் சேலம் களத்தில் என்ன நிலவரம், என்ன தேவை என்பதையெல்லாம் கேட்கும் எடப்பாடி பழனிசாமிக்கு, சில நாட்களாகவே கிடைக்கும் தகவல்கள் அவர் விருப்பத்திற்கு மாறாக உள்ளது என்கிறார்கள்.
சேலம் மக்களவைத் தொகுதியில், மொத்தம் 22 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எஸ். சரவணன், திமுக சார்பில் போட்டியிடும் எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் அமமுக சார்பில் போட்டியிடும் வீரபாண்டி எஸ்.கே. செல்வம் ஆகிய மூவருக்குத் தான் பலத்த போட்டி என்கிறார்கள்.
மேலும், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் பிரபு மணிகண்டன் மற்றும் நாம் தமிழர் கட்சியின் ராஜா அம்மையப்பன் உள்ளிட்டோர் அடையாளம் தெரிகிற வேட்பாளர்களாக சேலம் மக்களவைத் தொகுதியில் களம் காண்கின்றனர்.
வெற்றி வாய்ப்பு:
அதிமுக வேட்பாளர் சரவணன், கையெடுத்துக் கும்பிட வேண்டும் என்றால் கூ ட எடப்பாடியைக் கேட்டுதான் கும்பிடுவார் போல என்பதே அதிமுகவினரின் பேச்சு. கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலில் சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிட்டு பனைமரத்துப்பட்டி ராஜேந்திரனிடம் வெற்றி வாய்ப்பை நழுவ விட்டார் தான் இந்த சரவணன். சேலம் மாவட்டத்தில் திமுக ஜெயித்த ஒரே தொகுதியும் அதுதான்.
அதற்குக் காரணம் எடப்பாடிக்கும், ராஜேந்திரனுக்கும் இடையிலான, ’அண்டர் ஸ்டேண்டிங’ தான் என்று அப்போது அதிமுகவிலேயே பலரும் வெளிப்படையாகப் பேசினார்கள்.
மேயருக்கான வாக்கு:
அந்த வெற்றி வாய்ப்பை இழந்த சரவணனுக்கு, ”கவலைப்படாத... நான் உனக்கு வர்ற எம்.பி.எலக்ஷன்ல அம்மா கிட்ட சொல்லி சீ ட் வாங்கித் தர்றேன் என்று எடப்பாடி வாக்குறுதி அளித்தாராம். ஆனால், ஜெயலலிதா இறந்து இன்று கட்சியின் வேட்பாளர்களையே முடிவு செய்ய வேண்டிய இடத்தில் எடப்பாடி இருப்பதால், தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக சரவணனை எம்.பி. வேட்பாளராக நிறுத்தினார்.
மேலும், சிட்டிங் எம்.பி. பன்னீர் செல்வத்தின் வருத்தத்தைத் தணிக்க, அவரை வரும் உள்ளாட்சித் தேர்தலில் சேலம் மேயர் ஆக்குகிறேன் என்றும் எடப்பாடி வாக்கு கொடுத்திருப்பதாக பேச்சு அடிபடுகிறது.
வேட்பாளர்:
இந்த சூழலில் சரவணனின் செயல்பாடுகள் பற்றியும், அவருக்குக் கட்சியினரின் ஒத்துழைப்பு பற்றியும் உளவுத்துறை சார்பில் சில முக்கியத் தகவல்கள் எடப்பாடிக்கு அனுப்பப்பட்டுள்ளன.
சேலம் மாநகரில் இருக்கும் தலைமைப்பணிமனையில் ஒவ்வொரு நாள் மாலையிலும் நாளை காலை எந்த பகுதிக்கு பிரசாரம் செல்கிறோம் என்று எழுதிப் போடப்படுகிறது. அவ்வளவுதான். அதன் பின் குறிப்பிட்ட அந்த பகுதி கட்சி நிர்வாகிகளுக்கு தகவல் ஏதும் அனுப்பப்படுவதில்லையாம். அவர்களாகத்தான் தெரிந்துகொண்டு வேட்பாளரை வரவேற்கத் தயாராக வேண்டியிருக்கிறது.
சமாளிப்பு:
அதிமுக வேட்பாளர் சரவணனுடன் காலை 200 பேர், மாலை 200 பேர் ஷிப்ட் முறையில் செல்கிறார்கள். அவரைப் பற்றி குறிப்பிட்ட டிவி சேனல்கள் மற்றும் நாளிதழ்களில் பாசிட்டிவ் ஆன செய்திகள் வருவதற்கு பேக்கேஜ் பேசி ஏற்பாடு செய்தாகிவிட்டது. ஆனால், கட்சியின் இடை நிலை, அடி நிலை நிர்வாகிகளுக்கு பெரிய அளவில் கம்யூனிகேஷன் இல்லை. மேலும், பல பகுதிகளில் அதிமுக வேட்பாளரை வாக்காளர்கள் கடுமையாகக் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு வேட்பாளர் பதில் சொல்ல முடியாமல் தவிக்கிறார்.
அந்த பகுதி நிர்வாகிகள் இருந்தால் சமாளிக்கிறார்கள். இல்லையென்றால் நிலைமை அவ்வளவுதான்.
அதிருப்தி:
நத்திமேடு பகுதியில், அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டுப் போகும்போது, அவரது வாகனத்தின் முன் ஒரு பெண் நின்றுகொண்டிருந்திருக்கிறார்.
விரைவாக செல்ல வேண்டும் என்று நோக்கத்தோடு, இவர்கள் ஹாரன் அடிக்க, திரும்பிப் பார்த்த அந்தப் பெண், ”என்ன அவசரம் இப்ப உங்களுக்கு? ரோடே போடலை. ஓட்டு மட்டும் கேப்பீங்களா? உங்களுக்கு எதுக்கு ஓட்டுப் போடணும்?” என்று கிராமத்துபாணியில் தைரியமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
”கோவிச்சுக்காதீங்கம்மா.. இந்த முறை ஓட்டுப் போடுங்க.. ரோடெல்லாம் போட்டுடுறோம்” என வேட்பாளர் சரவணன் அசடு வழிய, உடன் நின்ற அந்த சேலம் தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ. சக்திவேல் அந்தப் பெண்ணிடம் சமாதானம் பேசி அனுப்பி வைத்திருக்கிறார்.
இந்த சம்பவம் மாதிரி தினம் தினம் பல்வேறு சம்பவங்கள் நடக்கின்றன. ஆனால் பேக்கேஜ் முறையால் பல செய்திகள் பத்திரிகைகளில் வருவதில்லை. பத்திரிகைகளில்வருவதில்லை என்பதால் அவை நடக்கவில்லை என்று ஆகிவிடாது. மக்களின் அதிருப்தி இருக்கிறது என்றும எடப்பாடிக்கு ரிப்போர்ட் போயிருக்கிறது.
தகவல்:
இதுமட்டுமல்ல... நேற்று முன் தினம் சேலத்தில் ஐடிவிங் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை மாநில ஐடிவிங் செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் நடத்தினார். அப்போதுதான் ஐடி விங் நிர்வாகிகளில் இருக்கும் பலருக்கு ட்விட்டர் அக்கவுண்டே இல்லை என்ற தகவல் அவருக்குக் கிடைத்திருக்கிறது. இதனால், அதிர்ந்து போனவர், ”தயவு செய்துஎல்லாரும் ட்விட்டர் அக்கவுண்ட் ஆ ர ம் பி ங் க , ஃபேஸ்புக்ல ஆக்டிவ்வா இருங்க... போனது போகட்டும். இன்னும் 15 நாள் இருக்கு.. அதுக்குள்ள முழுசா நாம சேலம் தொகுதியில சோஷியல் பிளாஸ்ட் பண்ணுவோம்” என்று கூட்டத்தை முடித்திருக்கிறார். இந்தத் தகவலும் எடப்பாடிக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.
கேள்விக்குறி:
இதையெல்லாம்விட எடப்பாடியின் சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் இருக்கும் அவரது பங்காளிகளில் சிலரே கூட, ”இதுவரைக்கும் ரெட்டை இலைக்குதான் போட்டுக்கிட்டிருந்தோம். இனிமே அதுக்குப் போடணுமானு யோசிக்கணும்” என்று தங்களுக்குள் விவாதம் நடத்தும் தகவல் வரை முதல்வருக்குப் போயிருக்கிறது.
பரப்புரைக் களத்தில் இருந்து சமூகவலைதளம் வரை சேலம் மக்களவை தொகுதியில் அதிமுக வேட்பாளருக்கு சவால்கள் நிறைய இருக்கிறது என்றும், அதேநேரம் அமமுக வேட்பாளர் வீரபாண்டி எஸ்.கே. செல்வமும், அவருக்கு அடுத்தபடியாக திமுக பார்த்திபனும் வேகமாக போய்க் கொண்டிருக்கிறார்கள் என்ற தகவலும் எடப்பாடிக்கு சென்றிருக்கின்றன.
இப்படியே போனால் கட்சியின் வெற்றியே கேள்விக்குறியாகிவிடும் என்றும் கூறியிருக்கின்றனராம்.
உத்தரவு:
வரும் 8-ம் தேதி முதல் சேலத்தில் தன் வீட்டில் தங்கியபடியே கொங்கு மண்டலத்தில் பிரசாரம் செய்ய திட்டமிட்டு இருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த விவகாரம் குறித்து முழு கவனம் செலுத்த உள்ளாராம். மேலும், வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் சேலம் தொகுதியில் அதிமுக வெற்றி பெற வைக்கும் பணியில் தன்னுடைய வலதுகரமான இளங்கோவனை இறக்கியுள்ளார்.