லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் மாணவரை ‘தாலிபான்’ என்று கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார் ஜக்கி வாசுதேவ். அதற்காக, மன்னிப்பு விடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் உள்ள லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனத்தின் மாணவர்களுடன் கடந்த மார்ச் 31-ம் தேதியன்று கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில், ஈஷா யோக மையத்தின் நிறுவனரான ஜக்கி வாசுதேவ் கலந்து கொண்டார். அந்த உரையாடலின் போது, பிலால் என்ற மாணவன் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு, ‘இவன் ஒரு பக்கா தாலிபான் காரன்’ என்று கூறியுள்ளார்.
மாணவர்களுடன், ஜக்கி வாசுதேவ் பேசும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவியது. அதோடு, ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் கல்வி நிறுவனமும், அங்குள்ள மாணவர் அமைப்பும் கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். அத்துடன், ஜக்கி வாசுதேவ் இதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்தது.
இதனையடுத்து, தனது பேச்சு குறித்த விளக்கத்தை வீடியோவாக பதிவிட்டு வெளியிட்டுள்ளார் ஜக்கி. அதில், ‘மானவர்களுடனான எனது உரையாடல் தொடர்பாக வெளிவந்த வீடியோ 'எடிட்' செய்யப்பட்டுள்ளது. ‘தாலிபான்’ என்று உணர்ச்சி பெருக்கில் கூறினேனே தவிர எந்த உள் நோக்கத்துடனும் அதைத் தெரிவிக்கவில்லை. அதேபோல், ‘தாலிபான்’ என்ற சொல்லுக்கு அரபு மொழியில் திறன்மிக்க மாணவர் என்று பொருள். மற்ற எந்த நோக்கத்துடனும் நான் கூறவில்லை’ என்று தெரிவித்த ஜக்கி வாசுதேவ், தன் பேச்சு யாருடைய மனதை புண்படுத்தியிருந்தால் தாழ்மையான மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன் எனத் தெரிவித்தார்.