யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. தேர்வில், 759 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில், அதிர்ச்சியான விஷயம் என்னவென்றால், தமிழகத்தில் இருந்து 35 மாணவர்கள் மட்டும்தான் தேர்வாகியுள்ளனர்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட 26 வகையான இந்திய குடிமைப் பணிகளுக்கான தேர்வு கடந்த ஆண்டு ஜுன் மாதம் நடந்தது. கடினமான இத்தேர்வை ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் எதிர்கொள்கின்றனர். இருப்பினும், குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்கள் மட்டமே தேர்ச்சி பெறுகின்றனர். அந்த வகையில், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. நாடு முழுவதும் நடந்த இத்தேர்வில் 759 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மூன்று கட்டங்களாக நடைபெறும் தேர்வில், கனிஷாக் கட்டாரியா என்ற இளைஞர் முதல் இடம் பிடித்திருக்கிறார். இவர், ஐஐடி மும்பையில் பி.டெக் பட்டம் பெற்றுள்ளார். அக்ஷித் ஜெயின் மற்றும் ஜுனைத் அகமத் ஆகியோர் அடுத்த அடுத்த இடங்களைப் பிடித்திருக்கின்றனர்.
தமிழகத்தில் கடந்த பத்து அண்டுகளை விட...
யுபிஎஸ்சி முதல்நிலை தேர்வு முடிவு கடந்த ஆண்டு ஜூலையில் வெளியானது. இதில் 9 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்றனர். தமிழகத்தில் இருந்து 432 பேர் தேர்வாகினர். தமிழகத்தில் இருந்து யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுபவர்களின் விகிதம் கடந்த சில ஆண்டுகளாகக் குறைந்து வருகிறது. அதிலும், இந்த ஆண்டு 35 மாணவர்கள் மட்டும்தான் தேர்வாகியுள்ளனர். கடந்த பத்து ஆண்டை காட்டிலும் இந்தாண்டு மிகக் குறைந்த அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அதோடு, 35 பேரில் 30 பேர் சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்து வெற்றி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.