ஜெயலலிதா எதையெல்லாம் எதிர்தாரோ அதையெல்லாம் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். எதையெல்லாம் கொண்டுவந்தாரோ அதையெல்லாம் அடமானம் வைத்துவிட்டனர் என டிடிவி தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.
சுயேட்சை எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் தஞ்சை மாவட்டம் சோழபுரம் கடைவீதியில் தனது மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை துவக்கியிருக்கிறார். தஞ்சை மாவட்டத்தில் உள்ள எட்டு சட்டமன்றத் தொகுதியிலும், தொகுதிக்கு ஒருநாள் என ஒதுக்கி எட்டுநாள் பயணத்தை நேற்று 2ஆம் தேதி மாலை 5 மணிக்கு துவங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "இன்று தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் அம்மாவின் ஆட்சி, என மூச்சுக்கு முன்னூறு முறை கூறுகின்றனர். ஆனால் ஜெயலலிதா எதையெல்லாம் எதிர்தாரோ அதையெல்லாம் கம்பளம் விரித்து வரவேற்கின்றனர். எதையெல்லாம் கொண்டுவந்தாரோ அதையெல்லாம் அடமானம் வைத்துவிட்டு மக்களை திண்டாட வைத்துள்ளனர்.
தஞ்சை பூமி, சோழர் பூமி, சோழநாடு சோறுடைத்து என்பார்கள் ஆனால் இன்று விவசாயிகளின் நிலையோ மோசமான நிலையாகிவிட்டது, நடவு பயிர்கள் முழுவதும் கருகிவருகிறது, அதை காப்பாற்ற கர்நாடகாவிடம் நீதிமன்றம் மூலம் தண்ணீர் கேட்க திறானியற்றவர்களாக, கர்நாடக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு கெஞ்சிவரும் நிலையில் இருக்கின்றனர்.
மீத்தேன் திட்டத்தை எதிர்த்து கதிராமங்கலம் மக்கள் 200 நாட்களுக்கு மேல் தொடர்ந்து போராடிவருகின்றனர். அவர்களின் நியாயமான கோரிக்கையை செவிக்கொடுத்து கேட்காத மக்கள் விரோத ஆட்சியாக இருக்கிறது. இந்த ஆட்சியை அகற்றவே இந்த மக்கள் சந்திப்பு பரட்சி பயணம்." என பேசி முடித்தார்.