சென்னை கோபாலபுரம் பள்ளியில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், மனைவி துர்காவுடன் வந்து வரிசையில் நின்று வாக்களித்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஒட்டுமொத்த தமிழக மக்களும் மாற்றத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தமிழகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டுமென்று மக்களை பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த தேர்தலில் 500, 1000, 2000, 5000 ரூபாய் என்று பணம் கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் பத்தாயிரம் ரூபாய் கூட தரப்பட்டிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன. ஆனால், மக்கள் நோட்டுக்கு அடிபணியாமல் நிச்சயமாக ஜனநாயகத்தை முறையாக காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
வாக்குப்பதிவு இயந்திரங்களில் பழுது ஏற்பட்டிருப்பதாக பல இடங்களில் புகார்கள் வந்தவண்ணம் உள்ளது. தேர்தல் ஆணையம் அந்த இயந்திரங்களை உடனடியாக பழுது நீக்கி வாக்குப்பதிவு சரியாக நடக்கச் செய்ய வேண்டும். இது வரை தேர்தல் ஆணையம், மத்திய, மாநில அரசுகளுடன் கூட்டணி வைத்து கொண்டுதான் செயல்பட்டு வந்தது. இனியாவது அந்த ஆணையம் முறையாக செயல்பட வேண்டும்.
இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.