இதோ வருவேன், அதோ வருகிறேன் என 1996-ம் ஆண்டுமுதல் அரசியலுக்கு வருவதாக தெரிவித்து வந்த ரஜினி ஜெயலலிதா மறைவுக்குப்பின் திடீரென தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும், தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள இடைவெளியை தான் நிரப்ப உள்ளதாகவும் பேசினார். மேலும் ரசிகர் மன்றங்களை 'ரஜினி மக்கள் மன்றம்' என்ற பெயரில் ஒருங்கிணைக்க ஆரம்பித்தார். அதேநேரம் சட்டப்பேரவைத் தேர்தல்தான் தன்னுடைய இலக்கு என அறிவித்ததுடன் நடந்து முடிந்த மக்களவை பொதுத்தேர்தலில் என்னுடைய ஆதரவு எந்தக் கட்சிக்கும் கிடையாது.
அதனால் ரஜினி மக்கள் மன்றம் மற்றும் ரஜினி ரசிகர் மன்றத்தின் பெயரில் என்னுடைய படமோ மன்றத்தின் கொடியோ, எந்தக் கட்சிக்கும் ஆதரவாகவோ, பிரசாரம் செய்வதற்காகவோ யாரும் பயன்படுத்தக்கூடாது. தமிழ்நாட்டின் முக்கிய பிரச்சனை தண்ணீர். வர இருக்கும் தேர்தலில், மத்தியில் நிலையான, வலுவான ஆட்சி அமைத்து யார் தமிழ்நாட்டின் தண்ணீர் பிரச்சனையை நிரந்தரமாக தீர்த்து வைக்கக் கூடிய திட்டங்களை வகுத்து அதை உறுதியாக செயல்படுத்துவார்கள் என்று நம்புகிறீர்களோ, அவர்களுக்கு நீங்கள் சிந்தித்து ஆராய்ந்து தவறாமல் வாக்களிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் எனக் கூறியிருந்தார்.
தமிழகத்தில் அடுத்து நடைபெறவுள்ளது சட்டமன்றத் தேர்தல் தான் என்பதால் ரஜினி நிச்சயம் அரசியல் களத்துக்கு வருவார் என நம்பி இன்று அவரது ரசிகர்கள் செயல்பட்டு வருகின்றனர். அந்தவகையில் ``#அடுத்த_ஓட்டு_தலைவருக்கே, #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே" என்ற ஹேஷ்டேக்குகளை திடீரென இன்று மாலை முதல் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இது உலக அளவில் இந்த ட்ரெண்டிங் இடம் பிடித்துள்ளது. ரசிகர்கள் இப்படி ஆர்ப்பரிக்க ரஜினி அரசியலுக்கு வருவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.