தமிழகத்தில் கடந்த பொதுத்தேர்தலை விட இந்த தேர்தலில் வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரி தவிர, மேற்குவங்காளம், ஜம்மு-காஷ்மீர், மகாராஷ்டிரா உட்பட 10 மாநிலங்களில், பெரியளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி, இரண்டாம் கட்டத் தேர்தல் நடைபெற்றது. மக்கள் காலை முதலே ஆர்வத்துடன் வாக்களித்தனர். பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது காரணமாக தாமதமாக வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்பின் மாலை 6 மணியளவில் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. மாலை 6 மணி நிலவரப்படி தமிழகத்தில் 69.55 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன. பின்னர் வரிசையில் நின்றவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தமிழகத்தில் இரவு 9 மணி நிலவரப்படி மக்களவை தேர்தலில் 70.90% வாக்குப்பதிவு நடந்துள்ளது. இது கடந்த தேர்தலை விட கிட்டத்தட்ட 2 சதவிகிதம் குறைவு. கடந்த 2014ம் ஆண்டு பொதுத்தேர்தலில் தமிழகத்தில் 73 % வாக்குகள் பதிவாகின. அதேநேரம் நாடாளுமன்றத் தேர்தலைவிட சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சதவீதம் கூடுதலாக உள்ளது. 18 சட்டமன்ற தொகுதி தேர்தலில் 71.62 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக அரூர் சட்டமன்ற தொகுதியில் 86.96% வாக்குகள் பதிவாகியுள்ளது. அதேபோல் நாடாளுமன்ற தேர்தலில் அதிகபட்ச நாமக்கல் தொகுதியில் 78 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. குறைந்தப்பட்ச வாக்குப்பதிவு மத்திய சென்னை 57.07 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.