நடிகர் ஸ்ரீகாந்த் விதியை மீறி வாக்களித்ததாகத் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 18ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற இடைத்தேர்தலும் நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள், திரை நட்சத்திரங்கள் என அனைவரும் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றினார்கள். இதில், நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குகள் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வாக்காளர் பட்டியலில் சிவகார்த்திகேயன் பெயர் விடுபட்டு இருந்த நிலையில் அவரை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதித்தனர். அந்த வாக்கு தற்போது பதிவாகிவிட்டதால், அதை செல்லாது என்று அறிவிக்க இயலாது எனத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையில், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் நடிகர் ஸ்ரீகாந்த் வாக்களிக்காமல் சென்றுவிட்டதாக முதலில் கூறப்பட்டது. அதன் பிறகு, அவர் வாக்களிக்கும் போன்ற காட்சிகள் ஊடகங்களில் வெளியானது. இந்த விவகாரம் குறித்த முழுமையான விவரங்களைத் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரியிடம் அறிக்கையாகத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய சத்யபிரதா சாஹூ, ‘வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாமல் இரண்டு நடிகர்கள் தங்கள் வாக்கினைப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் வாக்களிக்க அனுமதி வழங்கிய தேர்தல் நடத்தக்கூடிய பணியாளர்கள் மற்றும் அதிகாரிகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். இவர்கள், யாருக்கு வாக்கு வாக்களித்தார்கள் என்பது கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், வாக்குகள் ஏற்றுக் கொள்ளப்படும். அலுவலர்களிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ள நிலையில், இந்த இந்த வாக்குச்சாவடிகளில் இருந்து இரண்டு ஓட்டுகள் அதிகமாகப் பெறப்பட்டுள்ளன என இந்திய தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பட்டும். அதன் பிறகு, முடிவு எடுக்கப்படும்’ எனக் கூறினார்.